கூட்டமைப்பினர் நீதிமன்றம் செல்வது வேடிக்கையானது; வரதராஐப் பெருமாள்!

130shares

அரசியல் யாப்பின் பிரகாரம் 13-ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஐனாதிபதியோ, பிரதமரோ வழங்காதமை என்பது அரசயில் யாப்பிற்கு முரணாண அல்லது விரோதமான செயல் தான். அப்போதெல்லாம் அதற்கு குரல் கொடுக்காத அல்லது நீதிமன்றம் செல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது அரசியல் யாப்பைக் காப்பாற்றப் போகின்றோம் என்று நீதிமன்றம் செல்வது வேடிக்கையானது.

மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை ஆட்சியாளர்கள் பறிக்கின்ற போது அல்லது கொடுக்க மறுக்கின்ற போது கூட்டமைப்பினர் என்ன செய்து கொண்டிருந்னர் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

அரசியல் யாப்பை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தரப்பினர்கள் உட்பட பலரும் மல்லுக்கட்டிக் கொண்டு நின்கின்றனர். அதில் சரி பிழை இருக்கட்டும் அதனைப் பார்த்துக் கொள்வோம். ஆனால் தமிழ் மக்களுடைய விடயத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் எத்தனையோ மீறல்கள் நடந்திருக்கின்றது.

அதிலும் உதாரணத்திற்கு பொலிஸ் அதிகாரம் என்ற விடயத்தை எடுத்துக் கொள்கின்ற போது பொலிஸ் அதிகாரம் என்பது கூடுதலாகவோ குறைவாகவோ மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மகிந்த ராஐபக்ச தான் பொலிஸ் அதிகாரத்தைத் தர மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

ஆனால் புதிய ஏற்பாடுகளிலும் தாங்கள் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுக்க மாட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்கவும் பல கட்டங்களில் சொல்லியிருக்கின்றார். ஆக ஐனாதிபதியாக அல்லது பிரதமராக இருந்தாலென்ன ஒரு அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை உரிமைகளை மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதனைக் கொடுக்க மறுப்பதென்பதும் அரசியல் யாப்பிற்கு விரோதமான செயல் தானே.

அப்போதெல்லாம் இது தொடர்பில் கேள்வி எழுப்பினீர்களா? நீதிமன்றம் சென்றீர்களா? அதைப்பற்றி குரல் எழுப்பினீர்களா? அல்லது அதைக் கோரினீர்களா? என்றால் இவை ஒன்றையுமே செய்யவில்லை. ஆனபடியினால் அரசியல் யாப்பைக் காப்பாற்றப் போகின்றோம் என்பதல்லாம் பொய் அங்கு அரசியல் அதிகாரத்திற்காக போட்டி நடக்கின்ற போது ஒரு தரப்பைக் காப்பாற்ற நிற்கின்றீர்கள் என்பதே உண்மை என கூட்டமைப்பினரை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க