பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலையை வைத்து முன்னாள் போராளிகளை துன்புறுத்த நடவடிக்கை!

68shares

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு - வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுணதீவில் பொலிஸாரின் படுகொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகித்து முன்னாள் போராளிகளை கைதுசெய்யும் பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் பல பகுதிகளில் முன்னாள் போராளிகைளை இலக்குவைத்துள்ள பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் வீடுவீடாக சென்று முன்னாள் போராளிகளை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன், வவுணதீவு சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலே முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை சிறிலங்கா நாடாளுமன்றிலும் டிசெம்பர் ஐந்தாம் திகதி உரையாற்றியிருந்த சார்ளஸ் நிர்மலாதன் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலையை வைத்து முன்னாள் போராளிகளை துன்புறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடும் ஆத்திரம்வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...