மைத்திரிக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

466shares

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவு டிசெம்பர் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மைத்ரியின் விசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 13 மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றைய தினம் மூன்றாவது நாளாக தொடர்ந்த நிலையில், குறித்த விசாரணைகளை நாளை வரை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26-ஆம் திகதி ஸ்ரீலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த அரசியல் தீர்மானத்தின் பின்னர், நவம்பர் மாதம் 9-ஆம் திகதி 2096 இன் கீழ் 70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை விடுத்தார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யும்படி ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இரலங்கை மக்கள் காங்கிரஸ: தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள், மற்றும் பொது அமைப்புக்கள், தனி நபர்கள் என 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த நவம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெற்றபோது, குறித்த வர்த்தமானி அறிவிப்பு மீது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை டிசம்பர் 4ஆம் திகதிவரை பிறப்பித்தது.

இதற்கமைய நேற்று முன்தினமான டிசம்பர் 4 ஆம் திகதி குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றும் மற்றும் இன்றைய தினம் இந்த விசாரணைகள் தொடர்ந்தன.

மன்றில் இன்று முன்னிலையாகிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சார்பான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, அரசியலமைப்பின் 62 ஆவது பிரிவின் 2 இன் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னரே சபையைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

1978ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெரிவாகிய ஒரேயொரு நாடாளுமன்றத்தைத் தவிர, மற்றைய அனைத்து நாடாளுமன்றங்களும் ஆயுட்காலம் நிறைவுபெறுவதற்கு முன்னரே கலைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான பிரிவுகள், பொதுத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவில் கூறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதனிடையே மன்றில் பிரசன்னமாகிய மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சார்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா, ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை முன்வைத்தார்.

இந்த மனுக்களின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பது தகுந்த பிரிவுகளுக்கு அமைய சான்றுப்படுத்த மனுதாரர்களால் முடியாமற் போயிருப்பதாகவும், இந்த மனுக்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கிடையாது என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பான்மை பலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சனைகள் எழும்போது, சபையை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் மஹிந்த தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அரசியலமைப்பின் 33வது பிரிவின் 02 சீ மற்றும் 62ஆவது பிரிவின் 02 என்றபடி ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மன்றில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன குறிப்பிட்டார்.

இந்த பிரதிவாதங்களைக் கவனத்திற்கொண்ட 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடையுத்தரவை நாளை மறுதினமான டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி சனிக்கிழமை வரை நீடிப்பதாக அறிவித்தது.

அதேவேளை மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணைகளை நாளைய தினமான டிசெம்பர் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க