கூட்டமைப்பு அனைத்து அரசியல் தீர்மானங்களையும் எடுத்துவருவதற்கான காரணம் இதுதான்!

35shares

நாட்டில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்கிவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைத்து அரசியல் தீர்மானங்களையும் எடுத்துவருவதாக அந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய நடவடிக்கைக்கு தமிழர் தரப்பினரும், மஹிந்தவாதிகளும் கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையிலேயே வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (06) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் மருத்துவர் சிவமோகன் இந்த பதிலை கூறியிருக்கின்றார்.

எனினும் கொழும்பை மையப்படுத்தியிருக்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான மோதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிடாது நடுநிலை வகித்திருக்க வேண்டும் என்று கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த சுரேஷ் பிறேமசந்திரன் தலைமையிலான ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியும், கஜேந்திரகுமார் பொன்னம்பல் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வலியுறுத்தி வருகின்றனர்.

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரனும் அண்மையில் இதே கருத்தையே வலியுறுத்தியிருந்தார். எனினும் தற்போதைய குழப்பத்தில் நடு நிலை வகிப்பது என்பது மஹிந்த ராஜபக்சவிற்கு துணை போனதாகவே அமையும் என்று குறிப்பிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், அதனாலேயே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் வடக்க கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க விடாது ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியுமே தடுத்து வந்ததாக சிறிலங்கா ஜனாதிபதி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவரும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எவ்வாறு கூட்டமைப்பு ஆதரவுவழங்குகின்றது என்று கேள்வி எழுப்புவதாகவே ஜனாதிபதி மைத்ரியின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக டிசெம்பர் 4 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலும் மைத்ரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க