ரணிலின் கைப்பொம்மையாக இருந்த மைத்திரி!

68shares

சிறிலங்காவின் ஜனநாயகம் ஒக்டோபர் 26 ஆம் திகதியுடன் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை எப்போது ஸ்ரீலங்காவில் ஆரம்பமாகியதோ அப்போதே ஜனநாயகம் அதன் மான்பை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தற்போது நிறைவேற்று அதிகாரத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான மோதலே இடம்பெறுவதாகவும் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் வெடித்த அரசியல் குழப்பம் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், மஹிந்த மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் நாடாளுமன்றத்தில் நினைவேற்றியுள்ளன.

அது மட்டுமல்லாது மஹிந்த மற்றும் அவரது அமைச்சர்கள் அரசாங்கத்தின் பதவிகளில் நீடிக்க முடியாது தடுப்பதற்காக அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை முடக்கும் பிரேரணைகளை நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் சமர்ப்பித்து அவற்றையும் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றின.

இந்த நிலையில் டிசெம்பர் 3 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிப்பதற்கும், அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி வகிப்பதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

இவ்வாறான சூழலில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கின் தீர்ப்புக்கு அமையவே ஸ்ரீலங்கா அரசியலின் அடுத்த கட்ட மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைப்பொம்மை போன்று பயன்படுத்தியது உண்மையென தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ச ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்டதற்கான காணங்களையும் முன்வைத்தார்.

நாட்டின் இரு பிரதான கட்சிகளும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்டுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி மூன்றாம் தரப்பு நாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்து மாத்திரமே ஸ்ரீலங்காவின் அரசியலில் தலையிடுவதாக சுட்டிக்காட்டிய அவர், கையாளக் கடினமான தமிழ் தரப்பினை, கையாள கடினமான சிங்கள தரப்புடன் முட்டி மோதவைத்து அழித்ததும் சர்வதேச நாடுகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க