வடக்கு தெற்கு பிணக்கில் அணிலாக மாறும் வடக்கு ஆளுனர்!

91shares

வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு தான் தயாராகவிருப்பதாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அவர் நேற்று முற்பகல் 10 மணிக்கு வருகை தந்தார். அவரை ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட், இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி,, வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,

“வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன்.” அதற்கமைய இந்த மாகாணத்தை என்னால் முடிந்தவரை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். நான் வடக்கு மண்ணின் மைந்தன் இல்லை என்றாலும் இந்த மக்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்திருக்கின்றேன். ஆகையினால் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலக் கட்டுமானத்தில் ஓர் அணிலாகவேனும் நான் செயற்படுவேன். மேலும் நான் இந்த மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகின்றேன். அதனடிப்படையில் மக்களுக்காக என்னுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தயாராகவே வந்துள்ளேன்.

ஆனாலும் இங்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் சிக்கல்கள் இருந்தன எனக் கூறினார்கள். ஆகவே, அந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஜனநாயக வழியில் செயற்படுவது மிக அவசியமானது. ஜனநாயகத்தின் அடிப்படைக்கு குறைந்தளவு மூன்று விடயங்கள் தேவையாக உள்ளன.

அதில் முதலாவதாக ஒப்பந்தம் செய்யக் கூடிய ஆளுமை எமக்குத் தேவை, இரண்டாவதாகச் சட்டத்தின் ஆட்சி இருத்தல் வேண்டும். இறுதியாகச் சுதந்திரத்துக்கான தாகமும் அடிப்படையான தேவையும் ஜனநாயகத்துக்கு முக்கியமானவை. அதிலும் மேற்கூறிய மூன்று விடயங்களின் அடிப்படையில் செயற்படவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக வடக்கு மாகாணத்திலுள்ள சகல அலுவலகங்களிலும் அந்த அலுவலகங்களினூடாக மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களிலும் தமிழ்மொழி உட்பட இரண்டு மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

குறிப்பாக யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. ஆனால், வடக்கு மாகாணத்தில் தமிழ்மொழிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழ்மொழி இங்கு உச்சக்கட்டத்தில் இல்லாமல் வீழ்ச்சியிலேயே உள்ளது. இந்த நிலைமையைப் பார்க்கின்ற போது மிக வருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மொழி என்பது ஒவ்வொருவரதும் அடிப்படை உரிமை. அதனை மீறக் கூடாது. ஆகவே வட மாகாண அலுவலகங்களில் தமிழ் மொழி கட்டாயமானதாக்க வேண்டும்.

இந்த மாகாணத்தில் ஊழலுக்கு இடங்கொடுக்க முடியாது. அதற்கமைய ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

ஊழல் என்பது துஷ்பிரயோகம் மட்டுமல்ல, அடிப்படை உரிமையையும் பறிக்கின்ற காரணியாகவே அமைகின்றது. ஊழல் ஒரு புற்றுநோய் போலத்தான் எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்கின்றது என்று தெரியாது. வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்து இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றேன்.

ஆகவே, மக்களுக்காக என்னாலான சேவைகளைச் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனவே, ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களுக்காகச் செயற்படுவதற்கு அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க