ரணில் அரசின் திடீர் மாற்றம்; அதிர்ச்சியில் தமிழ் மக்கள்!

535shares

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திருந்த இறுதிக்கட்ட போரின் போது சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் என அழைக்கப்படும் கொத்துக் குண்டுகளும், இரசாயன ஆயுதங்களையும் கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்கா நாடாளுமன்றில் ஜனவரி ஒன்பதாம் திகதியான இன்றைய தினம் மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

போருக்குள் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தின் உள்ளிட்ட அரச படையினரால் கொத்து குண்டுகளும், இரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதற்கு தான் உயிருடன் இருக்கும் ஒரு சாட்சி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதேவேளை இந்த கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெறும் அரசியல் இலாபத்தை அடைவதற்காகவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றைய தினம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இறுதிக்கட்ட போரில் உயிர் தப்பிய ஒருவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீலங்கா படையினரின் கொத்துக் குண்டு தாக்குதலில் தனது கால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கமைய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சிறிலங்கா படையினர் பயன்படுத்தியதற்கு தான் சிறந்த சாட்சி என்பதால், சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன், ஸ்ரீலங்கா படையினர் இறுதிப் போரின்போது கொத்துக் குண்டுகளையும், இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசியலில் கீரியும் பாம்புமாக இருந்துவரும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினரும் முற்றாக நிராகரித்தனர்.

ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் ஒருபோதும் கொத்துக் குண்டுகளையோ, இராசாயன ஆயுதங்களையோ பயன்படுத்தவில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தெரிவித்தார்.

அதேபோல எந்தவொரு ஆதாரமும் இன்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சர்வதேச விசாரணை ஒருபோதும் நடத்தப்படாது என்றும் அமைச்சர் விஜேவர்தன திட்டவட்டமாக அறிவித்தார்.

”போரின்போது இரசாயனக் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளை ஸ்ரீலங்கா இராணுவம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்த ஆதாரங்களும் இல்லை. எமது படையினர் போரில் எந்தவகையான இரசாயனக் குண்டுகளையோ, கொத்துக் குண்டுகளையோ பாவிக்கவில்லை. சில குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவற்றுக்கு சாட்சிகள் இல்லை. எனவே இப்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் நிராகரிக்கின்றோம். எனக்கு முன்னர் உரைநிகழ்த்திய செஹான் சேமசிங்க கூறியதுபோல இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் அரசியல் இலாபத்தை எதிர்பார்த்து கூறியதாகும். அனைவரும் ஒருமித்து இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் இந்தத் தருணத்தில் இனவாத ரீதியில் பார்த்து மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் சில விடயங்களை முன்வைப்பதையிட்டு உண்மையிலேயே நான் கவலைப்படுகிறேன்.

அண்மையில் முல்லைத்தீவுப் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோது உயிர்களைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்கவும் பாடுபட்டனர். விக்னேஸ்வரன் உள்ளிட்ட இனவாதத்திற்கு உரமூட்டக்கூடிய அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இராணுவத்தினர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சினை செய்ய முயற்சி செய்தார்கள். அப்பாவி தமிழ் மக்களுக்கு சேவை வழங்கச் சென்று அவர்களை காப்பாற்றச் சென்று பின்னர் அப்பகுதியிலுள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து படையினர் குற்றச்சாட்டுக்களையே எதிர்கொண்டுள்ளதை இட்டு கவலையடைகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல, விக்னேஸ்வரன் உள்ளிட்ட சில இனவாதக் குழுவினரே இந்தக் குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டார்கள். அதேபோல ஸ்ரீலங்கா படையினரால் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்கள். எனினும் அதனையும் நான் நிராகரிக்கின்றேன். ஒருபோதும் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான தேவை எமக்கில்லை. எமக்கு உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ள முடியும். முப்படையினரால் அநாவசியமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க