யார் இந்த சவேந்திர சில்வா?

109shares

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய தளபதிகளில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவிக்கு அவரை சிறிலங்கா அரசாங்கம் நியமித்திருக்கின்றது.

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையினாலேயே குற்றச்சாட்டப்பட்டுள்ள இறுதிக்கட்ட போரின் போது முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இதனால் இறுதிக்கட்ட போரின் போது 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய பிரிகேடியராக பதவி வகித்திருந்த சவேந்திர சில்வா, போர் முடிவுக்கு வந்ததும் உடனடியாக மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.

இதனையடுத்து அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்சவின் வுிசுவாசமான இராணுவ உயரதிகாரியாகவும் இருந்த சவேந்திர சில்வா, உடனடியாக அமெரிக்காவின் துணைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு பெயர் போன சம்பவமாக கருதப்படும் வெள்ளைக்கொடி விவகாரத்துடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேரடியாக தொடர்புபட்டிருந்ததை தன் நேரில் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சியொருவரும் உறுதிப்படுத்தியிருந்ததாக 2013 ஆம் ஆண்டு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணியிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரும் இருந்ததாகவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அறிக்கையி்ட்டுள்ளன.

எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற மோதலின் போது 58 ஆவது படையணியினால் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கமும், இராணுவமும் அறிவித்திருந்தன. சிறிலங்கா அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து வெள்ளைக்கொடியுடன் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவதற்கு சென்ற நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களை படுகொலை செய்தமை போர் குற்றம் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பும் அடையாளப்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது நியமித்திருந்த ஓய்வுபெற்ற நீதியரசர் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவும் பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில் யஸ்மின் சூக்கா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டமும், 58 ஆவது படையணியிடம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்குள் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அதனால் அந்த படையணியின் கடடளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க