மனித உரிமைப் பேரவையில் ரணில் அரசாங்கத்துக்கு துணை போகக்கூடாது!

  • Shan
  • January 10, 2019
25shares

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் பொறுப்புக் கூறல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற நிலையில், அதனை தோற்கடிக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்திற்கு துணை போகக் கூடாது என அந்தக் கட்சியின் முன்னாள் பங்காளிகளில் ஒரு தரப்பான ஈபிஆர்எல்எப் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் புதிய அரசியல் சாசன வரைபை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்றும் அடித்துக்கூறும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இந்த நிலையில் உத்தேச அரசியல் சாசன வரைபு தொடர்பில் பெருமிதமாக பேசுவதில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அரசியல் பீடம் நேற்றைய தினம் கூடியிருந்த நிலையில், அது குறித்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சுரேஷ் பிறேமச்சந்திரன் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

ஜெனீவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

சிறிலங்காவின் ரணில் – மைத்ரி அரசாங்கம் இதுவரை குறித்த தீர்மானத்தின் முக்கியமான பரிந்துரைகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில், இந்த அமர்வில் தன்னை பாதுகாத்துக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் உத்தேச அரசியல் சாசன வரைபை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சந்தேகம் வெளியிடும் சுரேஷ் பிறேமச்சந்திரன் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போகக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு வெறுமனே ஆட்சியில் நீடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் அரசாங்கம் விரைவில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பயன்படுத்தி, தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோருக்கான நீதி, காணி விடுவிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தாமதமின்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்க கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க