அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் அரசியல் கைதி!

167shares

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

தனது வழக்குகளை துரிதப்படுத்தி தன்னை விடுதலை செய்யுமாறு கோரியே இவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 வயதுடைய சிவப்பிரகாசம் சிவசீலன் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த 5 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அசிரத்தையும் அக்கறையின்மையும் அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் கடந்த 5 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தண்ணீர் அருந்துவதை நிறுத்தியுள்ளதனால் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இறுதிக் கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக மூன்று வருடங்களின் பின்னர் 2012 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

யுத்தகாலத்தில் தனது சகோதரனையும், தாயையும் பறிகொடுத்த அவருக்கு அவருடைய தந்தையே சிறைச்சாலைக்கு வெளியில் துணையாக இருந்து வழக்கு விசாரணைகளை முன்னிட்டு செயற்படுத்தியுள்ளார்.

எனினும் தந்தையாரும் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி உயிரிழந்தையடுத்து, அவருடைய நலன்களைக் கவனிப்பதற்கு எவரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற வழக்கு விசாரணைகள் நீண்ட கால இடைவெளி கொண்டதாகவே தவணை இடப்படுகின்றது.

இதனால் வழக்கு எப்போது நிறைவடையும் என்று தெரியாத நிலையில் அவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க