மைத்திரி-மஹிந்த அணிக்குள் பலத்த மோதல்!

170shares

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் வலுத்தவண்ணமுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதில் மஹிந்த மைத்திரி தரப்பின் உள்வீட்டில் கடும் குடுமிச் சண்டை நிலவுவதாக உள்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் மைத்திரியே ஜனாதிபதியாக போட்டியிடுவார் என்றும் மஹிந்தவின் தாமரை மொட்டு அணியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிப்பார் என்றும் கூறிவருகின்றனர்.

குறிப்பாக நேற்றும் நேற்று முன் தினமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த சமரசிங்க, துமிந்த திஷாநாயக்க மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவர் என்றும் கூறியுள்ளனர். இதனை மஹிந்த ராஜபக்‌ஷ பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக நிலவிவருகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிக்கவேண்டும் என்று நிமால் சிறிபால டி சில்வா, கூறியதை மறுதலித்துள்ள மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேசேகர, ”நான்கு வருடம் நிமல் சிறிபால தூங்கிக் கொண்டிருந்தாரா? இப்போது பகற் கனவு காணுகிறார்.” என்று தனது ருவிற்றர் தளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் ரொஷான் ரணசிங்க என்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்தவே தீர்மனிப்பார் என்று செய்தியாளர்களிடம் அடித்துக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த மைத்திரி தரப்பினரின் கூட்டிணைவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள்ளேயே பலத்த மோதல்கள் உருவாகலாம் என அரசியல் அவதானிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க