அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த தரப்பினருக்கு பதிலடி கொடுத்த சட்டநிபுணர்!

159shares

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது என்று சட்டநிபுணரான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

சில கட்சிகள் இதுபோன்ற பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்ற புதிய அரசியல் யாப்பு தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான குழுவின் தலைவரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க, பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

உத்தேச புதிய அரசியலமைப்பானது ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவும், நாட்டைப் பிளவடையச் செய்து சமஸ்டியை உருவாக்குவதற்கான எண்ணத்திற்காகவும் கொண்டுவரப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபொன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்பிக்கப்படவிருக்கின்ற நிலையில், அதனை தோற்கடிப்பதற்கு உயிரையும் தியாகம் செய்யத்தயார் என்றும் மஹிந்த அணியினர் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்கள் தொடர்பாக விளக்களிப்பதற்காக கண்டியில் நேற்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை சட்டநிபுணர் லால் விஜேநாயக்க ஏற்பாடு செய்திருந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்த வழிநடத்தல் குழுவில் தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, லக்ஸ்மன் கிரியெல்ல, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அனைவரது இணக்கத்திற்கு அமைய குழு அறிக்கை தயாரிக்கப்படுவதால் சிலரால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் கிடையாது.

புதிய அரசியலமைப்பொன்று அவசியமாகும் என்பதை அண்மையில் வலியுறுத்தப்பட்டிருந்ததோடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பொன்றாக அது உருவாக்கப்பட வேண்டும். 2016ஆம் ஆண்டிலிருந்து இதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சிலர் கூறுவதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதோ அரசியலமைப்பு இல்லை.

அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகள், கருத்துக்களைப் பெறப்பட்டு தயாரிக்கப்படுகின்ற ஒரேயொரு அரசியலமைப்பு இதுவாகும். இதற்கு முன்னர் 1972, 1978ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்களில் கட்சிகளினதும், பொது மக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டிருக்கவில்லை. ஸ்ரீலங்காவில் முதற்தடவையாக பொது மக்களின் கருத்துக்கள் அரசியலமைப்பிற்காக பெறப்பட்டுள்ளதோடு அதனை யதார்த்தப்படுத்துவது அனைவரினதும் கடமையாகும்.

இதனை நிறைவேற்றுவதற்காக தெளிவான முறையொன்று இருக்கிறது. இருந்த போதிலும் கவனமற்ற ரீதியில் இதனை நிறைவேற்றக்கூடாது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து சிந்தித்து தெளிவான முறையில் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க