சிங்கள இனம் ஏனைய இனங்களை அடக்கியாளவும் இடமளிக்க முடியாது; மஹிந்த!

313shares

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள உத்தேச அரசியல் சாசன வரைபை தற்போதைய நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

இதனால் தாமதமின்றி பொதுத் தேர்தலை நடத்தி தேர்தல் விஞ்ஞாபனமாக உத்தேச அரசியல் சாசன வரைபிற்கான யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியும், தமது தரப்பும் மக்கள் முன்வைத்து அதற்கான ஆதரவை மக்களிடம் இருந்தே பெற்றுக்கொண்டு, அடுத்து ஆட்சியமைக்கவுள்ள தரப்பினர் அதன் அடிப்படையில் புதிய அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்று மஹிந்த ராஜபக்ச புதிய யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அதேவேளை தானும், தான் தலைமையிலான தரப்பினரும் ஒருபோதும் இனவாதத்தையே, இனங்களுக்கிடையிலான குரோதத்தையோ தூண்டிவிட முற்படவில்லை என்றும் தெரிவித்திருக்கும் மஹிந்த, சிறிலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள இனத்தை மற்றைய இனங்கள் அடக்கியாளவோ அல்லது, சிங்கள இனம் ஏனைய இனங்களை அடக்கியாளவோ இடமளிக்க முடியாது என்றும் சூளுரைத்திருக்கின்றார்.

சிறிலங்கா அரசியல் சாசன சபையில் இன்றைய தினம் பிரதமர் ரணில் சமர்ப்பித்த உத்தேச அரசியல் சாசன வரைபிற்கான பரிந்துரைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

“19ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தபோது நான் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தையும், மக்களையும் ஏமாற்ற வேண்டாம். நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமை இல்லை. ஒரு இனத்துக்கு மற்றைய இனத்தை அடக்கும் அதிகாரம் இல்லை. அதற்கு இடமளிக்க முடியாது. சிங்கள இனத்தை ஏனைய இனங்கள் அடக்குவதற்கு உரிமை இல்லாததை போல, சிங்கள இனத்துக்கும் ஏனைய இனங்களை அடக்கியாள உரிமை இல்லை. இரண்டு இனங்களும் ஏற்றுக்கொள்ளும், இணங்கும் இடத்துக்கு கொண்டுவரவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க முடியாது. இனமொன்றை பகைத்துகொண்டு ஒரு இனத்துக்கு உரிமையை பெற்றுக்கொள்ள முன்வந்தால் அது தொடர்பில் குரோம் ஏற்படும். இனங்களுக்கிடையிலான குரோதத்தை ஏற்படுத்திவிடவேண்டாம் என்றுதான் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். அரசியல் குரோதத்தையும் உருவாக்கிவிடவேண்டாம்.

இதன்போது, ஆளும் தரப்பில் உள்ளவர்கள் இனவாதத்தையும், குரோதத்தையும் நீங்களே ஏற்படுத்த முனைகின்றீர்கள் என்று குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, தான் ஒருபோதும் இனங்களுக்கிடையிலான குரோதத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.

“உங்கள் மனதில்தான் அந்த எண்ணம் உள்ளது. நீங்கள் நாடாளுமன்றதிலும் வெளியிலும் வரலாற்றில் ஆற்றிய உரைகளையும் செயற்பட்ட விதங்களையும் பார்த்தால் உங்களிடம் இனக் குரோதம் உக்கிரமடைந்துள்ளதை பாரக்க முடியும். புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல. அரசியலமைப்பை கொண்டுவரும் தரப்பு கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. எனவே, இதுவிடயத்தில் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது அறியப்படவேண்டும். மாகாணசபைத் தேர்தல் கூட இழுத்தடிக்கப்பட்டுவருகின்றது.

எனவே, புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய சூழ்நிலை இது கிடையாது. தேர்தலொன்றுக்கு வாருங்கள். நாங்களும் எங்களது அரசியலமைப்பு யோசனையை கொண்டு வருகின்றோம். இரண்டு யோசனைகளையும் பார்த்து மக்கள் தீர்மானிக்கட்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க