காதல் கடிதத்தை போன்று புதிய அரசியலமைப்பு வரைபை நிறைவேற்றிக் கொள்ள முடியாது; ஜே.வி.பி!

31shares

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் நினைப்பதுபோல காதல் கடிதத்தைப் போன்று புதிய அரசியலமைப்பு வரைபை இரகசியமாக எழுதி நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான அனைத்துப் படிமுறைகளையும் நன்கு அறிந்துவைத்திருக்கும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, உத்தேச அரசியல் யாப்பின் வரைபை பார்ப்பதற்கு முன்னரே நாட்டில் இனவாதத்தை விதைப்பதற்காக பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வது கேவலமான செயற்பாடு என்று ஜே.வி.பி கூறியுள்ளது.

உத்தேச புதிய அரசியலமைப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவும், நாட்டைப் பிளவடையச் செய்து சமஸ்டியை உருவாக்குவதற்காவுமே கொண்டுவரப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபொன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்பிக்கப்படவிருக்கின்ற நிலையில், அதனை தோற்கடிப்பதற்கு உயிரையும் தியாகம் செய்யத்தயார் என்றும் மஹிந்த அணியினர் சூளுரைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் ஜனவரி 11 ஆம் திகதியான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசியலமைப்பு வரையை கண்டவர்கள்போல மஹிந்த தரப்பினர் பொய்பிரசாரங்களை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார்.

‘நாடு இரண்டாகப் பிளவடையப் போகிறது, மத்திய அரசின் அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட போகின்றன, அனைத்து மாகாணங்களுக்கும் வெவ்வேறான பொலிஸ் கடடமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன, அவசர தருணங்களிலும் நாட்டின் சமாதானம், ஐக்கியத்தை முன்னெடுக்க முடியாதபடி மத்திய அரசையும், சட்டத்தையும் பலவீனப்படுத்துவதற்கான வரைபுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அரசமைப்பை 19 ஆவது திருத்தத்தைப் போன்றே நிறைவேற்றப் பார்க்கிறார்கள் என்ற விடயங்களை மஹிந்த ராஜபக்சவும், அவரது விசுவாசிகளும் கூறி வருகின்றனர். சாதாரண மக்கள் இதனை கேட்கும்போது, மஹிந்த ராஜபக்ச உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபினை வாசித்து நாடு எதிர்கொள்ளவுள்ள அழிவுகளைப் பற்றி அறிந்தே பேசுகிறார் என்றுதான் கருதுவார்கள். அவரது அறிக்கைகளில் இந்த விடயங்களே உள்ளன. எனவே வரைபு சமர்பிக்கப்பட்டதாக கூறும் மஹிந்த ராஜபக்சவும், அவரது அணியினரும் குறித்த வரைபை சமர்பிக்குமாறு கோருகிறேன். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல் எதனைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நாமும் ஆவலாக இருக்கின்றோம். பொய்யுரைக்காமல் இருக்கும்படி நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்”.

எதிர்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் தாங்களே சிறந்த பௌத்தர்கள் என்றும், நாட்டின் மீதும், சிங்கள பௌத்தஇனத்தின் பாலும் அதீதி அக்கறை கொண்டவர்கள் என்றும் பெருமிதம் வெளியிட்டு வருகின்ற போதிலும், புத்த பெருமானின் அடிப்படை போதனைகளைக் கூட அவர்கள் பின்பற்றாது அப்பட்டமாக மீறி வருவதாகவும் ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டினார்.

“ சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது கூட்டமைப்பின் வேறு எவருமோ அவர்களது கற்பனையில் தோன்றுவதை எழுதிய வரைபை கொண்டுவரப் போகின்றார்கள் என்று நினைத்து எவரும் குழப்பமடையத் தேவையில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு என்பது காதல் கடிதமல்ல. யாராவது எழுதி எங்கேயாவது முத்திரைப் பதித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு. சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இந்த நாட்டில் பௌத்த தர்மம் என்ன கூறுகிறது? தானே கூறினாலும் கண்ணால் காண்பதற்கு முன்னர் நம்பிவிடாதே என்று மிகத் தெளிவாக போதித்திருக்கின்றது.

புத்த பெருமான் கூறுவதை ஏற்றுக் கொள்வதைப் பார்க்கிலும் மஹிந்த ராஜபக்ச கூறுவதை ஏற்றுக்கொள்ளலாமா? அரசியலமைப்பானது நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பாடசாலை மாணவர்களும் அறிவார்கள். இதைவிடுத்து சுமந்திரன், அடைக்கலநாதன் ஒரு வரைபை கொண்டுவந்த காரணத்தில் உடனே அரசியலமைப்பாகி விடாது. இந்த உண்மைகளை தெரிந்துகொண்டே இனவாதத்தை விதைத்து அதிகாரத்தைப் கைப்பற்ற முயற்சிப்பது கேவலமான விடயமாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க