சவேந்திர சில்வாவுக்கு பதவியுயர்வு; யுத்தக்குற்றங்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது; அனந்தி சசிதரன்!

30shares

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக பதவியேற்றுள்ளதால் போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பது நிரூபணமாகியுள்ளதாக போரின் இறுதி நாட்களில் தனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்து தேடி அலையும் மனைவிகளில் ஒருவரான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் சிறிலங்கா தெரிவித்திருக்கின்றார்.

இதனால் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையான பிரதம அதிகாரி என்ற பதவி உயர்வை சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ளதை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் என அனைவராலும் அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினரும், சர்வதுச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

போர் குற்றங்களுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியிருந்த பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சிக்கு ஒப்புதல் வாக்குமூலமொன்றை வழங்கியிருந்த சிறிலங்கா இராணுவத்தின் உயர் நிலை அதிகாரியொருவரும் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியிருந்ததுடன், இதன்போது 58 படையணியின் கடடளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவும் சம்பவ இடத்தில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் போரின் இறுதி நாட்களில் குறிப்பாக போர் நிறைவடைவதற்கு 48 மணித்தியாலங்களுக்குள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட 500 க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஹஸ்மின் சூக்கா தலைமையிலான சிறிலங்காவின் நீதிக்கும் உண்மைக்குமான செயற்திட்டம் குற்றம்சாட்டி வருவதுடன், சவேந்திர சில்வாவை விசாரணைக்கு உட்படுத்துமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது தளபதியாக கருதப்படும் பிரதம அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவி உயர்த்தப்பட்டார்.

இதற்கமைய ஜனவரி பத்தாம் திகதியான நேற்றைய தினம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், சர்வமதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் இராணுவத்தின் பிரதம அதிகாரி என் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவரது நியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக அமையத்தில் ஜனவரி 11 ஆம் திகதியான இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன், சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

உள்நாட்டிலேயே போர் குற்றங்கள் தொடர்பிலான விசாரணையை நடத்தலாம் என்று கூறிவரும் தரப்பினர், சவேந்திர சில்வாவின் நியமனத்தை எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றனர் என்றும் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரி இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட தனது கணவரான தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலைஅரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் கைக் குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண மக்களை காணாமல் ஆக்கியதற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய 58 ஆவது படையணியே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

இதற்கு போதுமான சாட்சிகள் இருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர் வழங்குவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற கொடூரங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது இது முதலாவது தடவையல்ல என்றும் தெரிவிக்கும் அனந்தி சசிதரன், சிறிலங்காவிலுள்ள ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினர் என்னதான் குற்றங்களை இழைத்தீரந்தாலும் அவர்களை தண்டிக்கத் தயாரில்லை என்பதுடன், அவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க