அரசியல் பழிவாங்கல்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ளப்படல் வேண்டும் - மஹிந்த கோரிக்கை!

18shares

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் இடமாற்றங்கள், பணி இடைநிறுத்தங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவின் இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் 1.30ற்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

இதற்கமைய இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, சுயாதீன தொலைக்காட்சி உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களில் அரசியல் பழி வாங்கல்கள் தொடர்வதாக குற்றஞ்சாட்டியதோடு, இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

“சுயாதீன தொலைக்காட்சி உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களில் அரசியல் பழி வாங்கல்கள் தொடர்கின்றன. விசேடமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கும், இளைஞர் சேவைகள் மன்றத்தில் 23 பேர் போதிய தகைமை இல்லையெனக்; காரணம் காட்டி, அவர்களின் சேவைக்கு பொருந்தாத வகையில், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைவிட, அதிகளவான பணியாளர்கள் என்ற காரணத்தைக் கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 26 பேருக்கு பொலன்னறுவை, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு, தேவையற்ற வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 30 பேர், கொழும்பு பிரதான காரியாலாயத்தில் இருந்து, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் உரிமை மீறல் விடயமாகும்.

கல்வி அமைச்சின், 30 பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட விடயமும் சட்டத்திற்கு முரணானது. அதனைவிட இலங்கை போக்குவரத்து சபையில் அரசியல் நோக்கத்துடன் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், புகையிரத திணைக்களம், மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிலும் அரசியல் பழி வாங்கல்கள் தொடர்கின்றன.

இந்த அரசியல் பழி வாங்கல்களால் அரச ஊழியர்கள் தமது கடமைகளை சரியாக செய்வதில் மிகப்பெரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளுக்கு அப்பால் சென்று அரசியல் பழி வாங்கல்களை மேற்கொள்ளும் விடயமாகவே அவை அமைந்துள்ளன. அவசரமாக வழங்கப்படும் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட வேண்டும். அவசரமாக வழங்கப்படும் இடமாற்றங்கள் நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தப்பட வேண்டும்”. என்றார் மகிந்த.

இதையும் தவறாமல் படிங்க