ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட 30 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்!

30shares

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் இடமாற்றங்கள், பணி இடைநிறுத்தங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவின் இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பாக பதிலளித்த, பொது நிர்வாகத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமையே அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

“எமது அரசாங்கம் அரசியல் காரணங்களுக்காக, இடமாற்றங்களையோ, பணி இடைநிறுத்தத்தையோ மேற்கொள்ளவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவை உருவாக்கி, அதன் சுயாதீன தன்மையை பாதுகாத்து அரச சேவையை பலப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் பணிகளை மேற்கொள்கின்றது.

எவ்வாறெனினும், இதுத் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில், அரச சேவையில் வருடாந்தம் இடம்பெறும் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் என்பன அரச சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமையயே நடைபெறுகின்றது.

எவ்வாறெனினும், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர்கள் அரசியல் பழி வாங்கல்கள் தொடர்பில் 32,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. எவ்வாறெனினும் எங்காவது தவறுதலாகவேணும் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம்”. என்றார்.

இதன்போது குறுக்கிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தொழிலாளர்களின் உரிமைககளை மீறும் வகையில், சுயாதீன தொலைக்காட்சியில் 30 ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். .

இதற்கு பதிலளித்த அமைச்சர்ரஞ்சித் மத்தும பண்டார, 'அவர்கள் ஒழுக்கத்தை மீறி செயற்பட்டார்கள். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர், நடைபெற்ற விடயங்களை அவதானித்திருந்தால் அது விளங்கியிருக்கும். அந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு நியமனம் பெற்ற அதிகாரிகளைக் கூட குறித்த ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. ஒழுக்க மீறலை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க