புதிய அரசியல் யாப்பு வரைபை நிராகரிக்குமாறு மஹிந்தவை மைத்திரி தூண்டுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

19shares

புதிய அரசியல் யாப்பு வரைபை நிராகரிக்குமாறு மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள தலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திரைமறைவில் இருந்து தூண்டிவிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

தென்னிலங்கையில் உள்ள பௌத்த இனவாத சக்திகள் அரசியல் யாப்பு வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம் என்று சூளுரைத்துள்ள நிலையில், கவீந்திரன் கோடீஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவினால் விசேட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்த விசேட நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்று முற்பகல் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியலமைப்பில் நாட்டை பிளவுபடுத்தும் விடயங்கள் உள்ளதாக மஹிந்தவாதிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு வரைபை தடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறைமுகமாக மேற்கொண்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

அம்பாறை - மத்தியமுகாம் பிரதேசத்தில் இருபத்தைந்து வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க