தெருவில் நின்று விமர்சனம் செய்யும் இளைஞ்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபடவேண்டும்!

11shares

தெருவில் நின்று விமர்சனம் பண்ணுவதை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டில் இளைஞர்கள் தங்களை உள்ளாக்க வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னை நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தவராசா கலையரசன் அவர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுசரணையின் கீழ் வீடுகள் அற்ற வறிய குடும்பங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய கலையரசன்:

அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழர்களுக்கு இருக்கின்றது. ஏன் எனில் தமிழ் மக்களின் அரசியல் இருப்பு ,தமிழர்களின் தாயக அபிவிருத்தி என்பன தமிழ்தேசிய கூட்டமைப்பினராலே சாத்தியமாகும்.

வெறுமனே தெருவில் நின்று விமர்சனம் செய்யாது இளைஞர்கள் தமிழர் தம் பிரச்சினைகளை தீர்க்க எம்மோடு கைகோர்க்க வேண்டும். இதில் உங்களுடைய உழைப்புக்கள் கடுமையாக இருக்க வேண்டும். வெறும் விமர்சனங்களை முன்வைக்ககூடாது. அரசியல்வாதிகளது பணி என்ன என்று கேட்க வேண்டும்.

தமிழர் நிலப்பரப்புக்களை இந்த நாட்டிலே அராஜகம் செய்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்த முனைந்தனர் அதனை நாங்கள் துணிந்து நின்று எதிர்த்தோம் அவ்வாறு காப்பாற்றியதன் விளைவுதான் இந்த வீட்டு திட்டத்திற்கான காணிகளை நாங்கள் எமது மக்களுக்கு வழங்க முடிந்தது. இல்லையெனில் படை முகாங்களாக மாறியிருக்கும் என இந்த நிகழ்வின்போது சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இன்று இடம்பெற்றது . விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சிறப்பு அதிதிகளாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கலன் சூரிய, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இரா.லதாகரன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள்,பயனாளிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க