மைத்திரியின் ஆலோசனையில் வருகிறது புதிய சட்டம்!

106shares

குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பாரதூரமான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மனித உரிமைகள் என்ற பெயரில் சிலர் அதற்கு எதிராக குரல் எழுப்புவதாக, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பாதாள உலகத்தினரை இல்லாதொழித்தல், குற்றங்களைத் தடுத்தல், போதைப்பொருள் கடத்தல்களை ஒழித்தல், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக அவர்கள் தமது குரலை எழுப்புவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் சாதகமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

பொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கும் அதன் சேவைகளை உயர் தரத்தில் வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயற்பாடுகள் கடந்த காலத்தில் தவறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தான் பொலிஸ் திணைக்களத்திணை பொறுப்பேற்று இரண்டு மாதங்களேயான குறுகிய காலத்திற்குள் அதனை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, தனது ஆலோசனைகளுக்கமைய புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்களை, பொலிஸ் திணைக்களம், பொலிஸ் ஆணைக் குழு, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆகியவை இணைந்து கலந்தாலோசித்து துரிதமாக செயற்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க