ஜெனிவாவை இலக்கு வைத்து தமிழர் தரப்பு நகர்வு!

55shares

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் உள்ளடக்கவேண்டும் என்று தமிழர் தரப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் என்று நம்பப்படும் கனடா, ஜேர்மனி, பிரிட்டன், மசிடோனியா ஆகிய நாடுகளுடன் இது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாத ஆரம்பத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றியிராத நிலையில் 2017ஆம் ஆண்டு 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே 34/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை மீதான இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பை நீடிக்கும் தீர்மானம் எதிர்வரும் ஜெனிவா அமர்வில் நிறைவேற்றப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

கடந்த காலத்தில் அமெரிக்கா இந்தத் தீர்மானங்களை முன்மொழிந்திருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானத்தை கனடா, ஜேர்மனி, பிரிட்டன், மசிடோனியா ஆகிய நாடுகள் சமர்ப்பிக்கும் என்று தெரியவருகின்றது.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

அதற்கு மேலதிகமாக சில விடயங்கள் தீர்மானத்தில் உள்ளடக்கவேண்டும் என்று தமிழர் தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. புதிய அரசமைப்பு நிறைவேற்றம் முக்கியமாக இணைக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க