மடுவில் நடந்த கோரம்; ஒவ்வொரு ஈழத்தமிழரினாலும் மறக்கமுடியாத தாக்குதல் சம்பவம்!

1243shares
Image

கடந்த வருடம் (2008) எமது ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் இளைஞன் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 9 பதிவுகள் வெளியாகியிருந்தன,

அந்தப்பதிவில் இன்றையதினம் (29) இடம்பெறவிருக்கும் மடுவில் பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பரிதாபமாக கொல்லப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களென 20 உறவுகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வை முன்னிட்டு மீண்டும் குறித்த பகுதியை மடுவில் நடந்த இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் உங்களுக்கு வழங்குகின்றோம்.

கடந்த 2008-01-29 அன்று மதியம் 2.00 மணியளவிலிருந்து நடந்தது இதுதான்., (இளைஞனின் மணவோட்டதத்தின் வாயிலாக ஒரு உண்மையின் பகிர்வு.,)

பெரியபண்டிவிரிச்சான் மாகா வித்தியாலயம், சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைகள் தற்காலிகமாக தடசனாமருதமடுவில் இயங்கி வந்தது. அப்போது மடுவிலிருந்து பள்ளமடுவுக்கு மக்களின், மாணவர்களின் போக்குவரத்துக்காக தனியார் பேருந்து ஒன்றும் இயங்கி வந்து கொண்டிருந்தது. நான் பாடசாலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு அயலில் வசிக்கும் புதிய நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை சிறிது தூரத்தில் பெரிய சத்தம்!

வழக்கமாக கேட்பதுதானே எங்கோ இராணுவம் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்கிறது என்று எனக்குள் புலம்பிக் கொண்டு விளையாட்டு தொடர்கிறது..

சிறிது நேரம் கழித்து நோயாளர் காவு வண்டி அதி வேகத்தில் மடுவை நோக்கி செல்கின்றது. என்ன நடந்தது? ஓடிச்சென்று பார்த்தேன், அப்போதுதான் தெரிந்தது சிறிது நேரத்தின் முன்தான் உலகையே உலுக்கிய அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை...

பள்ளமடுவிலிருந்து மடு நோக்கி பொது மக்களுடனும், மாணவர்களுடனும் பயணித்த தனியார் பேருந்து கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது என்ற அதிர்சி செய்தியை அறிந்தேன். ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நின்றேன் அந்த பேருந்தில் பயணித்த என்னுடன் படித்த சக மாணவர்கள், எனக்கு படிப்பித்த ஆசிரியர், எனது ஊர்மக்கள், பச்சிளங் குழந்தைகள் என மொத்தம் 20 பேர் அகால மரணமடைந்ததுடன் 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் கிளிநொச்சியில் செஞ்சோலையில் நடந்த மாணவர்கள் மீதான வான் தாக்குதலை அடுத்து உலகத்தை உலுக்கிய பாரிய இனப்படுகொலை இதுதான். ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் ஆறுதலுக்கு கூட யாருமில்லை ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம், இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மடு தேவாலயத்தில் வைத்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பெரும்திரளான மக்களின் கண்ணீருடன் ஸ்ரீலங்கா இராணுவத்தின் சரமாரியான எறிகணைத் தாக்குதலன் மத்தியில் மடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச் சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் இன்றளவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என குறித்த சாட்சி "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு" என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பு - நடராசா ஜெயகாந்தன்.

இதையும் தவறாமல் படிங்க