மடுவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

80shares
Image

மன்னார் மடுவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கிளைமோர் குண்டு தாக்குதல் மூலம் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய (29) தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்ரீலங்காவில் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியான 2008 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி மன்னார் மடு பிரதேசத்தில் இழுப்பைகடவையிலிருந்து மடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவும் படையணியினரால் 02 மணியளவில் கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலின்போது மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களென 20 பேர் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பத்தின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை நினைவுகூறப்பட்டுள்ளது.

கொடூரம் இடம்பெற்ற நேரமான பிற்பகல் 02.00 மணியளவில் இந்த நினைவுகூரல் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பிரதேச மக்கள், இளைஞர்களால் கொல்லப்பட்டவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க