புதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்!

1790shares

இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட S13 எனும் புதிய தொடருந்து அண்மையில் கொழும்பு-யாழ்ப்பாணம்-காங்கேசந்துறை ஆகியவற்றுக்கிடையிலான உத்தரதேவி சேவையாக ஈடுபடுத்தபட்டுவரும் நிலையில் குறித்த தொடருந்து தொடர்பில் மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக மூன்றாம் ஆசனங்களைக் கொண்ட பெட்டியில் முற்பதிவுப் பகுதியும் முற்பதிவற்ற சாதாரண டிக்கற் பகுதியும் ஒரே நேருக்கு தடுப்புக்கள் இல்லாமல் அமைந்துள்ளதனால் இதில் பயணித்துவரும் மக்கள் பலவித அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த மூன்றாம் வகுப்பு பெட்டியில் முற்பதிவு செய்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் கூறியதாவது,

“எவ்வளவோ எதிர்பார்ப்புடன் இந்த புதிய ரயிலில் ஏறினேன். ஆனால் எதிர்பார்த்ததைவிட மிகவும் மோசமான ஒரு ரயில் பயணத்தை உணர்ந்தேன். நாங்கள் பதிவு செய்த மூன்றாம் வகுப்பு பெட்டியில் சாதாரண டிக்கெட்டில் பயணிப்போரும் ஏறி மிகவும் நெருக்கியபடி பயணித்துள்ளனர். அதில் சில இளைஞர்கள் பெண்கள் மீது அங்க சேட்டைகளில் ஈடுபட்டதனையும் அவதானித்தேன். பதிவு செய்த ஆசனத்தில்கூட நிம்மதியான பயணம் இல்லை. ஏறும்போதும் தள்ளி விழுத்தியபடி ஏறுகிறார்கள். முற்பதிவுக்கென ஒதுக்கிய ஆசனத்தில் ஏன் தேவைக்கதிகமானோரை ஏற்றுகிறீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டதற்கும் உரிய பதில் இல்லை. மிகவும் வெறுப்பான ஒரு பயணம். பேசாமல் பேருந்தில் வந்திருக்கலாமோ என்று தோணியது.” என்றார்.

இதேவேளை குறித்த தொடருந்தில் பயணிக்கும் சிலர் சுகாதாரத்துக்குக் கேடான முறையில் நடந்துகொள்வதாகவும் வெற்றிலை சாப்பிட்டு தொடருந்திலேயே துப்பிவிடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் படம் ஒன்று வெளியிட்டு விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகதாகும்.

இதையும் தவறாமல் படிங்க