கட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்!

2300shares

தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக உரிமை கோரப்பட்ட முதலாவது வான்புலிகள் அணியின் தாக்குதலிற்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

அதாவது கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26ஆம் நாள் கொழும்பிலுள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்காக இரணைமடு வானூர்தி ஓடுதளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதனை இயக்கிச் சென்ற இரண்டு வானோடிகளிடமும் தலைவர் பிரபாகரன் கண்டிப்பாக கூறிய விடயமே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

கேணல் ரூபன் மற்றும் லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய இரண்டு வானோடிகளும் (பின்னாளில் வான் கரும்புலிகளாக மாறியவர்கள்) இரணைமடுவிலிருந்து கட்டுநாயக்க வான்படைத் தளத்தின்மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக புறப்படுவதற்கு முன்னர் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கின்றனர்.

இரவு உணவு வேளை முடிந்ததும் குண்டுகள் பொருத்தப்பட்டு தாக்குதலுக்கு தயாரான விமானத்தை செலுத்துவதற்கான கட்டளைக்காக இரண்டு வானோடிகளும் காத்திருந்தவேளை, இருவரையும் மிக அருகில் அழைத்த தலைவர் பிரபாகரன், பின்வருமாறு அறிவுறுத்தினார்.

“நீங்கள் செல்வது சாதாரண களமுனை அல்ல. பொதுமக்களையும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களையும் கடந்துசெல்லப்போகிறீர்கள். உங்கள் இலக்கு சிலவேளைகளில் தவறவிடப்படலாம். அந்த இலக்கை அடையமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அவசரத்தில் பொதுமக்கள்மீதோ வழிபாட்டுத் தலங்கள்மீதோ தாக்குதல்களை நடத்திவிடாதீர்கள். நமது இலக்கு எது என்று உங்களுக்கு தெரியும். அதைத் தொடமுடியவில்லையெனில் மீண்டு வந்துவிடுங்கள்” என்று கண்டிப்பாக கூறி, வெற்றியோடு வாருங்கள் என வாழ்த்தி வழியனுப்பிவைக்கிறார்.

இந்த சம்பவம் முன்னாள் போராளிகளால் வெளியிடப்பட்டு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான ஒரு உணர்வலையைத் தோற்றுவித்துள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது.

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் குறித்து உலக வல்லரசு நாடுகளிடம் ஒருவித ஆச்சரியமான நிலைமை காணப்பட்டதாக சர்வதேச பத்தி எழுத்தாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக இரவு நேரத்தில் தாக்குதலுக்குச் செல்வதுடன் சிறிலங்காவுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட அதி சக்திவாய்ந்த இந்திரா ராடார்களின் கண்ணிலேயே மண்ணைத் தூவும் அளவுக்கு அவர்களின் வானோடித் திறமை காணப்பட்டதாக முதன்மைப் படுத்திக் கூறப்படுகிறது.

மேற்குறித்த விடயம் உண்மையும்கூட. குறிப்பாக விடுதலைப் புலிகளால் இதுவரை நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதல்களின்போது ஒரு சொற்ப நேரத்திற்கு முன்னரே அவர்களின் விமானம் ராடார்களில் பதிவாகியது. தாக்குதல் நடத்தச் செல்லும்போது கடலுக்கு மேலே குறைந்த உயரத்தில் பறந்தமையே இதற்கான காரணமாக சொல்லப்பட்டது.

அதி வேகத்தில் பயணிக்கும் விமானம் ஒன்றை கடல்/தரை மடத்திலிருந்து குறைவான உயரத்தில் செலுத்துவதென்பது மிகவும் கடினமான காரியமாகும். வளிமண்டலத்தின் மேலுதைப்பு மற்றும் கீழுதைப்பு விசைகளை சம நேரத்தில் கிழித்தபடி ஒரு விமானப் பறப்பு நிகழ்வதென்பது வானோடிகளின் அதிவிசேட திறமையிலேயே தங்கியுள்ளதாக விமானப் பொறியியல் கூறுகின்றது.

இந்த நிலையிலும் இலக்கு தவறாது தாக்குதல் நடத்திவிட்டு மீளவும் தரையிறங்கியமை குறித்து சமூக வலைத்தளங்களில் இன்று சிலாகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க