சன். குகவரதனின் அதிரடி! தென்னிலங்கையில் புதிய உதயம்!

59shares

தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எதிராக கொழும்பு மாவட்டத்தில் புதிய தமிழ்க் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சிலிருந்து பிரிந்து செயற்படும் மேல் மாகாண சபை உறுப்பினரான சன்.குகவரதன் அறிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் புதிய கட்சி தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளராக இருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் சன்.குகவரதன், தனிப்பட்ட வியாபாரத்தில் காசோலை மோசடி செய்ததாகவும் அதனால் கட்சிக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை காரணம் காட்டி அவரை இடைநிறுத்துவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து அதிருப்தியடைந்த மேல் மாகாண சபை உறுப்பினரான சன்.குகவரதன், ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதோடு தற்போது புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான எஸ்.இராஜேந்திரன், மேல் மாகாண சபை உறுப்பினரான சன்.குகவரதனுடன் இன்றைய தினம் இணைந்து கொண்டார்.

அவருக்கு பொன்னாடைகள் மற்றும் மாலைகள் இட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்றைய தினம் பகல் நடைபெற்றதோடு புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதன்போது விடுக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க