தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைக்கே புதிய அரசியலமைப்பு! மஹிந்தவின் சீற்றத்திற்கு பதிலடி கொடுத்த லால்!

65shares

உத்தேச புதிய அரசியலமைப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே தயாரிக்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் காணப்படுவதாக சட்டநிபுணரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இந்தக் கூற்றை வன்மையாக கண்டித்துள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய பொதுமக்கள் கருத்துக் கணிப்பை நடத்திய குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க, விசேட நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்கின்ற மஹிந்த தரப்பினரது யோசனைகளும்கூட அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து இயங்குகின்ற அச்சு மற்றும் இலத்திரனியல் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்களுடன் அண்மையில் சந்திப்பொன்றை நடத்திய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது வெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஜயம்பத்தி விக்ரமரட்ண ஆகியோரது தேவைகளுக்காகவே தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய பொது மக்கள் கருத்து சேகரிப்புக் குழுவின் தலைவரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க, மஹிந்த ராஜபக்சவின் இந்தக் கூற்றை நிராகரித்தார்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இப்படியான போலிப் பிரசாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கடிந்துகொண்டார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

இல்லை. இல்லை. இது மிகவும் பொய்யான கூற்றாகும். இந்த அரசியலமைப்பு பணிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு எம்மால் முடிந்தது. அதனை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வகட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையை அமுல்படுத்தினாலே போதும் என்று தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மஹிந்த ராஜபக்ச 13ற்கும் அப்பாலான தீர்வைத் தருவதாக கூறியிருந்தார். ஆனால் 13 பிளஸ் அல்ல, 13ஐ சரியாக கொடுத்தாலே போதும் என்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. இப்படியான நிலையில்தான் சுமந்திரனின் பெயரைப் பயன்படுத்தி நான் கூறியதுபோல தேர்தலுக்குத் தயாராகின்றனர். இல்லையென்றால் சுமந்திரன் வடக்கிலும் சரி, தெற்கிலும்சரி ஒரே மாதிரியான விடயத்தையே தெரிவிக்கின்றார்.

நாங்கள் தயார், ஆனால் நாட்டை ஆட்சிசெய்கின்ற சமமான உரிமையைக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். அதனால் அந்தக் கருத்தில் எந்த உண்மையும் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற அரசியலமைப்புச் சபையிலேயெ விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். 10 பேர் அடங்கிய விசேட நிபுணர்களே இந்த அறிக்கையை தயாரித்தனர்.

வழிநடத்தல் குழு கூடி தயாரித்த யோசனைகள், மக்களின் யோசனைகள், உப குழுக்களின் யோசனைகள், பந்துல குணவர்தன தான் நிதி சம்பந்தப்பட்ட உப குழுவின் தலைவராக இருந்தவர், இவர்களுடைய யோசனையின்படியே அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுவொரு இறுதி அறிக்கையும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை கொண்டுவந்தால் அதனை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த 04ஆம் திகதியான திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்காவின் தேசிய தினத்தில் உரையாற்றியபோது அறிவித்திருந்தார்.

அதேபோன்று தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து தனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சட்டநிபுணரான லால் விஜேநாயக்க, நாடாளுமன்றத்தில் தேசிய அரசு அமைப்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டால் அதனை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக வரையறுக்கப்பட்டது. எனினும் தேசிய அமைச்சரவையை அமைப்பதாயின் 48 உறுப்பினர்கள்வரை அமைச்சரவையை அதிகரித்து மொத்தமாக 98 வரை உச்சவரம்பு செய்துகொள்ளலாம் என்றும் உள்ளது. இந்த யோசனையானது ஒரேயொரு உறுப்பினரது எதிர்ப்புக்கு மத்தியிலும் 224 உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆகவே தேசிய அரசை அமைப்பதற்கு முயற்சித்தால் அது சட்டவிரோதமானதல்ல. ஆனால் அது அவசியமா என்பது தற்போதைய நிலையில் நாட்டின் மற்றொரு பிரச்சினையாகும். சட்டரீதியாக அதற்கு இடமுள்ளது. ஒன்றரை வருடத்திற்குள் வேலைகளை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு குறைவு என்பதால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை செய்யப்பார்க்கிறது.

சுதந்திரக் கட்சியின் 18 பேரது ஆதரவை கோருகின்றனர். அந்த 18 பேரும் அதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மக்களின் எதிர்ப்பும் காணப்படுகிறது செலவுகள் அதிகரிக்கின்றமையினால். ஜனாதிபதிக்கு அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது. அரசியலமைப்பை மீறி அப்பதவியில் தொடர்ந்தும் இருப்பதானது அகௌரவத்திற்குரியது என்பதால் அவர் இராஜினாமா செய்யதான் வேண்டும்.

ஒருமுறை அவர் அரசியலமைப்பை மீறிவிட்டார். தேசிய அரசு குறித்து ஜனாதிபதி மீண்டும் அரசியலமைப்பை மீறினால் யாராவது உச்சநீதிமன்றை நாடும் சந்தர்ப்பத்தில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிவிட்ட அபகீர்த்தியே ஏற்படும். தேசிய அரசை அமைத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பது அரசியலமைப்பிலேயே உள்ளதோடு ஜனாதிபதியும் 3 அமைச்சுப் பதவிகளை வகிப்பதால் நிமல் சிறிபாலடி சில்வா உட்பட ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை ஏன் வகிக்கமுடியாது? நாடாளுமன்றத்தில் தேசிய அரசு யோசனை நிறைவேற்றிவிட்டால் அதனை நிராகரிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க