ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் கால அவகாசம்; எஞ்சியுள்ள சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடு!

178shares
Image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது இன படுகொலைகளின் எஞ்சியுள்ள சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடு என சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்ணம் சுகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாட்சிகள் அழிந்துகொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்னம் சுகாஸ், அதற்கு இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவிற்கு மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலிந்து காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் நிலையில் அந்தக் கோரிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியாபரணம் ஏப்ரஹாம் சுமந்திரன் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்கனவே இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையிலேயே மீண்டும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையிலே சுமந்திரனின் இந்த கருத்திற்கு மனித உரிமை செயற்பாட்டாளர் கனகரட்ணம் சுகாஸ் கடும் கண்டனம் வெளியிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்தை காப்பாற்ற முற்படுவதாகவும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கனகரட்ணம் சுகாஸ் குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் தவறாமல் படிங்க