மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அமையவேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பமாம்!

26shares

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஒன்று அமையவேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பமென தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன கட்சி, எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்காவில் மாற்றம் ஒன்று நிகழுமென்ற நம்பிக்கை இந்தியாவிற்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்த தமது தரப்பிடம் இந்திய பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஒன்றிற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அந்தக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில் இந்திய உப ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். புத்தி ஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றனர். இந்த வருடத்திற்குள் ஸ்ரீலங்காவில் மாற்றம் ஒன்று நிகழும் என்ற எதிர்ப்பார்ப்பு அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தேசிய தேர்தல் ஒன்று நடைபெற்றால் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கம் ஒன்று உருவாகுமென்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம். அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மாத்திரம் நாம் செயற்படப்போவது இல்லை. எதிர்வரும் 10 வருடங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்துவதற்கான கொள்கை ரீதியிலான அடித்தளத்தை இடுவதே எமது நோக்கம். அடிமட்டத்தில் இருந்து அந்த கொள்கை உருவாவதற்கான பணிகளை ஆற்றுவதே எமது பிரதான நோக்கம்.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு அரசியல் அமைப்புச் சபைத் தலைவரின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் எற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது தமது கட்சியின் பிரதானமாக நோக்கமாக இந்த விடயமே காணப்பட்டதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் 19ஆவது திருத்தத்தில் சில மாற்றங்களை செய்ய தீர்மானித்திருந்தோம். அந்த திருத்தத்தை ஒரு வெற்றிகரமான திருத்தமாக நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஆகவே அதற்கு சில திருத்தங்கள் அவசியம். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்துக்கொள்ளும் பொருட்டே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. திணைக்களங்களுக்கான தலைவர்களை சுயாதீனமாக நியமிப்பதே அதன் நோக்கம். எனினும் சபாநாயகர் தலைமையில் இயங்கும் அரசியல் அமைப்புச் சபையில் அந்தப் பணி ஓரளவேணும் நிறைவேற்றப்படுகின்றதா? என்பது கேள்விக்குறியே. நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது அவர்களது அனுபவத்தை மாத்திரம் கவனத்திற்கொள்ளப்போவது இல்லை என்ற வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து வெளியிட்டிருந்தார். அனுபவத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு நியமனங்களை வழங்கமுடியுமெனின் அரசியல் அமைப்புச் சபை ஒன்றின் அவசியம் என்னவென அவர் கேள்வி எழுப்பினார். அதில் பிரச்சினைக் காணப்படுகின்றது. அனுபவத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு ஏனைய விடயங்களை புறந்தள்ளினால் நீதிபதிகளின் திறமைகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதே சபநாயகரின் கருத்து. இதற்கு அரசியல் அமைப்புச் சபை என்ன நடவடிக்கைகளை தேற்கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில், அரசியல் அமைப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தமைக்கான காரணம்; இதுவரை அந்தச் சபையால் தெளிவுபடுத்தப்படவில்லை. நியமனங்கள் அரசியல் ரீதியாக இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது? அதனைவிட அரசியல் அமைப்புச் சபைத் தலைவரின் அதிகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அந்த சபைக்கு நியமிக்கப்படும் சிவில் சமூக பிரதிநிதிகள் தொடர்பில் சில பொறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதையும் தவறாமல் படிங்க