ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்க பிரித்தானியா தீர்மானம்!

59shares

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

மேலதிக கால அவகாசம் வழங்குவதற்கு போரின்போது பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில், பிரித்தானியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த ஸ்ரீலங்காவிற்கு மேலதிக கால அவகாசத்தை வழங்கும் வகையில் பிரித்தானியா கொண்டுவரும் தீர்மானத்திற்கு கனடா, ஜேர்மனி, மசடோனியா மற்றும் மொண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்துவதாக இணங்கம் தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

30 இன் கீழ் 1 என்ற இந்த தீர்மானத்தில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட நீதிமன்ற பொறிமுறையை உருவாக்கவும் ஸ்ரீலங்கா இணங்கியிருந்தது.

ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வின் போது ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலதிமாக இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த கால அவகாசத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுக்கொண்ட போதிலும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை எதனையும் மேற்கொள்ளவில்லை என்ற பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தில் 70 ,000 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த தமது நாட்டு இராணுவத்தை விசாரணைக்கு உட்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றது.

குறிப்பாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருவதுடன், கலப்பு விசாரணை பொறிமுறையை அமுல்படுத்தப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுப்பு உள்ளிட்ட விடயங்களையும் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ள ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்ட மக்கள் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும் தமிழ் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்காவுடன் இருந்து வரும் ஒத்துழைப்பை மீண்டும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிப்படையான உத்தியோகப்பற்ற பேச்சுக்களை நடத்த உள்ளதாகவும் அதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க