ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழு இயங்க வேண்டும்!

36shares

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழு இயங்க வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் நிறைவடைகின்ற நிலையில் ஸ்ரீலங்காவிற்கு மேலும் கால அவகாசத்தை வழங்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கமானது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினை மாத்திரமே நிறைவேற்றியுள்ளதாக யாழ் ஊடக அமையத்தில் பெப்ரவரி 12 ஆம் திகதியான இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தினார்.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத்தருவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லையெனத் தெரிவித்த அனந்தி சசிதரன், இதனால் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான குழு ஒன்று ஜெனிவா கூட்டத் தொடர் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டமையினால் ஜெனிவா அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பில் அனுமதியை கோரியுள்ளதாகவும் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க