மறப்போம் மன்னிப்போம்! தமிழ் மக்களுக்கான சாபக்கேடு

44shares

இனப்படுகொலையை மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சிற்கே இடமில்லை. அதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை என ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமா சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்படுவதுடன் தமிழ் மக்களுக்கு நீதி நியாயயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான எல்லாவற்றையும் கைவிட்டிருக்கின்ற கூட்டமைப்பினர் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது போன்று யுத்தக் குற்றங்களையம் கைவிட்டு விசாரணைகளையும் கைவிட்டு மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு வந்திருப்பதானது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கு விஐயம் செய்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மறப்போம் மன்னிப்போம் எனக் கூறிய கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே சுரேஸ்பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்கு மாகாணத்திற்கு விஐயம் செய்த பிரதமர் இங்கு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்திருக்கின்றார். அவருடைய அந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையல்ல.

வடக்கு மாகாணத்திற்கு விஐயம் செய்த பிரதமர் யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் பல நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தீர்மானங்ளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அத் தீர்மானத்தை நிறைவேற்ற நான்கு வருட கால அவகாசம் கொடுத்தும் இதுவரையில் பெரியதாக எதுவும் நடக்கவில்லை என்ற விடயமும் இருக்கின்றது.

அதனை செய்ய முடியாத பிரதம மந்திரி அவர்கள் எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் தொடர்ந்தும் நாங்கள் இந்த விடயஙக்ளை இவ்வாறு இழுத்துக் கொண்டு செல்ல முடியாது என்ற பாணியில் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்.

இந்த நிலையில் முக்கியமான விடயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் பல எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா அறிக்கைகள் சொல்கின்றன. அதில் முக்கியமாக வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.

அதில் பல பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அங்கு மக்களைச் செல்லச் சொல்லி அங்கு வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும் பால்மா வாங்குவதற்காக வரிசையில் நின்ற சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவ்வாறு பல சம்பவங்கள் யுத்தக் குற்றங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வளவு மோசமான முறையில் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஒரு விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதாவது இந்தக் கொலைகள் எவ்வாறு நடாத்தப்பட்டன என்று விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த விசயங்கள் நடைபெறாதவாறு எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அது மாத்திரமல்லாமல் காணாமற்போனோர் சம்மந்தமாகவுமு; இலங்கை அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் இருக்க அப்படியான விசாரணைகளை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்வதற்கு கூட தயாரில்லாமல் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிச் சொன்னால் இதனை எந்த அடிப்படையில் கூறுகின்றார் என்று கேட்கின்றோம்.

மிக மோசமான முறையில் யுத்தத்தை நடாத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்து பல ஆயிரக்கணக்கானோரை கடத்திக் கொண்டு சென்று அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற சூழ் நிலையில் அவற்றுக்கான நீதியை நிலைநாட்டாமல் அந்த மக்களுக்கான நீதியை நியாயத்தைப் பெற்றுக் கொடுக்காமல் எவ்வாறு இதனை பிரதமர் கூற முடியும்.

இதில் யாருக்கும் மரண தண்டணை கொடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றே கோருகின்றோம் அவ்வாறு விசாரிக்கப்பட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அதற்குப் பிற்பாடு குற்றவாளிகள் யாரும் காணப்பட்டால் அதற்கு மன்னிப்புக் கொடுப்பது பற்றி சிந்திக்க முடியும்.

ஆதனை விடுத்து எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நியாயத்தைக் கொடுக்க பிரதம மந்திரிக்கு விருப்பம் இல்லை. சிங்கள மக்களை திருப்திப்படுத்தி தேர்தலில் வாக்குகளை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையிலே தான் இந்தப் பிரச்சனைகளைப் பேசுகின்றார் என்பது தான் உண்மையான விளக்கம்.

ஆனால் இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஏதோ ஆழம் பதிந்த கருத்துக்களைச் சொல்லியுள்ளதாகவும் அதனை ஏற்றுக் கொள்வதும், வரவேற்பதும் நிச்சயமாக வெறுக்கத்தக்க செயல் மாத்திரமல்ல அது உண்மையாகவே தமிழ் மக்களை நோகடிக்கக் கூடிய செயற்பாடும் ஆகும்.

வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி எல்லாவற்றையும் கைவிட்டு விட்டார்கள். அத்தோடு ஒற்றையாட்சியையும் பௌத்தத்திற்கு முதலிடம் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது யுத்தக் குற்றங்களையும் கைவிட்டு விசாரணைகளையும் கைவிட்டு மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு கூட்டமைப்பும் பிரத்தியோகமாக தமிழரசுக் கட்சி வந்திருப்பதானது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என்று தான் கூற வேண்டும் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க