இலங்கையை அதிரவைத்த விமான விபத்து; ஆட்டங்கண்டன போயிங் விமானங்கள்!

1635shares

எதியோப்பியாவில் இடம்பெற்ற பயங்கர விமான விபத்து, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் போயிங் ரக விமானங்கள் பற்றிய எதிர்வினைகள் சர்வதேச ரீதியில் எழத்தொடங்கியுள்ளன.

எதியோப்பியன் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த விபத்தில் சிக்கிய விமானம், போயிங் ரகத்தினைக் கொண்டுள்ள நிலையில் ஏற்கனவே குறுகிய கால இடைவெளியில் இந்தோனேசியாவின் லயன் எயார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளானமை தெரிந்ததே.

இந்த நிலையில், எதியோப்பியாவில் விழுந்து நொருங்கிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணைகள் தீவிரமாக தொடர்ந்தவண்ணமுள்ளன.

எவ்வாறாயினும் போயிங் நிறுவனத்தின் 737 மக்ஸ் 8 ரக விமானங்களை சீனா, இந்தோனேஷியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தமது நாட்டின் வான்போக்குவரத்துச் சேவையில் இருந்து தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளதுடன் போயிங் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளன.

இதேவேளை இலங்கையைப் பொறுத்தவரை சிறிலங்கன் விமான நிறுவனத்தின் சர்வதேச வான்போக்குவரத்து நிலவரப்படி, போயிங் ரக விமானங்கள் தற்பொழுது சேவையில் இல்லை. முற்றிலும் எயார்பஸ் ரக விமானங்களைக்கொண்ட 27 விமானங்களே சேவையிலுள்ளன.

இலங்கையில் போயிங் ரக விமானங்களின் பாவனை 1979ஆம் ஆண்டு ஆரம்பித்து 1992ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் முடிவுக்கு வந்தது.

அந்த காலப்பகுதியில் எயார் லங்கா நிறுவனத்தின் சேவையிலிருந்த போயிங் 737-200 பாரிய விபத்திலிருந்து அருந்தப்பு தப்பியது.

கட்டுநாயக்க-சென்னை வான்போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த குறித்த விமானம் சென்னையில் தரையிறங்கும்போது பாரிய இடரை எதிர்கொண்டது. தரையிறங்கும்போது விமானத்தின் வலதுபக்க கியர் செயலிழந்தமையினால் வலது பக்க இறக்கை தரை நோக்கி தாழ்ந்தது.

இதனால் ஓடுதளத்திலிருந்து விமானம் வலப்பக்கமாக திரும்பியது. அதன்போது விமானத்தின் முன் சக்கரமும் வலதுபக்க இறக்கையும் ஓடுதளத்தின் வலப்புறமுள்ள புல் தரையுடன் மோதிக்கொண்டன.

மேலும், விமானத்தின் வலதுபக்க இயந்திரம் நிலத்துடன் மோதுண்டு திடீரென தீப்பற்றிக்கொண்டது. மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டபோதும் விமான நிலையத்திலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் உடனடியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விமானத்திலிருந்த 104 பயணிகளும் 12 சிப்பந்திகளும் விமானத்தின் இடதுபக்கம் வாயிலாக காயங்கள் ஏதுமின்றி காப்பாற்றப்பட்டனர்.

முற்றிலும் போயிங் விமான தயாரிப்பின் தவறாகவே விபத்துக்கான காரணம் கூறப்பட்டது. அன்றைய சம்பவத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்தில் போயிங் ரக விமானம் முடிவுக்கு வந்தது.

இதன்பின்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரனதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் காலத்தில் எயார்பஸ் விமானங்கள் அறிமுகமாகின்றன.

எயார்பஸ்-340 விமானம் 1994ஆம் ஆண்டு பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரக விமானத்தினை ஆசியாவிலேயே முதன்முதலில் பாவனைக்கு கொண்டுவந்த நாடு இலங்கை என்றே பதியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் முற்றிலும் எயார்பஸ் விமானங்களையே பயன்படுத்திவரும் சிறிலங்கன் விமான நிறுவனத்திடம் எயார்பஸ் 380 ரக விமானம் இதுவரையில் பாவனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எயார்பஸ் விமானங்களிலேயே மிகப்பெரிய அளவில் விளங்கும் இந்த விமானங்களின் தயாரிப்புப் பணிகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டளவில் நிறுத்தப்படவுள்ள நிலையில் இலங்கை இவற்றினை பயன்படுத்துவதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

எவ்வாறாயினும் போயிங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 777X விமானத்தை வெளியிடவுள்ள நிலையில் குறித்த விமானமே உலகின் மிகப்பெரிய விமானமாக விளங்கப்போகின்றது என சொல்லப்படுகிறது.

ஆனாலும் தற்போதைய எதியோப்பிய சம்பவத்தினையடுத்து அதற்கான விழா இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதியோப்பிய மற்றும் இந்தோனேசிய விமானங்கள் குறுகிய காலத்தில் வீழ்ந்து நொருங்கியமை போயிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க