ஆவேசமாக கொத்திக் கொன்ற கோழிகள்! பரிதாபமாக பறிபோன உயிர்!!

  • Shan
  • March 14, 2019
255shares

கோழிகள் ஒன்றுசேர்ந்து கூட்டமாக நரி ஒன்றைக் கொத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் வட மேற்கு பிரான்சின் பிரிட்டானியாவில் உள்ள ஒரு பண்ணையில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.

வழக்கத்துக்கு மாறாக ஒரு இளம் நரி குறித்த கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டினுள் புகுந்துள்ளது. அந்த கூண்டின் கதவுகள் தானியங்கிமூலம் இயக்கப்படுவதால் உள்ளே சென்ற அந்த நரியால் வெளியே வரமுடியாமல் போனது. கோழிகள் உள்ளே சென்று மீண்டும் வெளியே வரமுடியாத வசதியினடிப்படையிலேயே அந்த தானியங்கி கதவு அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் மூவாயிரம்வரையிலான கோழிகளை அடைத்துவைக்கக்கூடிய அந்த பெரிய கூண்டினுள் புகுந்த நரியால் வெளியே வரமுடியவில்லை. கோழிகளின் பிரமாண்ட எண்ணிக்கையினைக் கண்ட நரி அங்குள்ள மூலையொன்றில் பயந்த நிலையில் பதுங்கியுள்ளது.

எவ்வாறாயினும் கோழிகள் தமது கூட்டுமந்தை உணர்வில் நரியை கொத்திக் கொத்தி தாக்கத் தொடங்கின. மிகுந்த அலறல் சத்ததுடன் அந்த நரி கோழிகளின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் இறுதியாக உயிரை விட்டது.

அந்த பண்ணை அமைந்துள்ள கிராஸ் சீன் எனப்படும் விவசாயப் பள்ளியின் பண்ணைத்துறைத் தலைவர் பஸ்கால் டானியேல் என்பவர் இந்த தகவலை ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அவரின் கூற்றுபடி, கோழிகள் நரியின் கழுத்தில் கொத்தியுள்ளன. அதற்கான காயங்கள் நரியின் கழுத்தில் காணப்படுகின்றன. கூண்டின் ஒரு மூலையிலிருந்து அந்த நரியின் சடலம் மறுநாள் காலையிலேயே மீட்கப்பட்டது.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்த அந்த கோழிப் பண்ணையில் உள்ள கோழிகள் பகற்பொழுதில் பெரும்பாலும் கூண்டினுள் நிற்காது வெளியிலேயே நேரத்தைச் செலவிடும். பின்னர் மாலை வேளையில் மீண்டும் தமது கூண்டுக்குத் திரும்பும்.

முன்னதாகவே கூண்டினுள் சிக்கிக்கொண்ட நரி மாலை வேளையில் பெரும் எண்ணிக்கையில் கூண்டுக்குள் வந்த கோழிகளைப் பார்த்து மிரண்டுபோய் மூலையில் தஞ்சம் புகுந்திருக்கக்கூடும். இதன்போதே கோழிகள் கூட்டமாக கொத்திக் கொன்றுள்ளன என்கிறார் அவர்.

இதையும் தவறாமல் படிங்க