ஐ.தே.க வுக்கு எதிராக மெகா கூட்டணி - கை-மொட்டு ஒன்றிணைவு

12shares

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதாக இரண்டு கட்சிகளும் கூட்டாக அறிவித்துள்ளன.

எனினும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காகக் கொண்டு, இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என தெரிவித்திருக்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள், மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது தமது பிரதான நோக்கமென அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கவுள்ள புதிய கூட்டணி தொடர்பிலான முதற்கடட பேச்சுவார்த்தை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக, அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மற்றும் அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ ஆகியோர் பங்கேற்றனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் அந்தக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில், எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் கூடி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவது தொடர்பிலும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர

“ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான மிகப்பெரிய கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நாம் பல்வேறு விடயங்களை பேசினோம். பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடினோம். நாம் பல்வேறு கொள்கைகளுடன் செயற்படுகின்றோம். அது தொடர்பிலும் பேசினோம். எதிர்வரும் 21ஆம் திகதி நாம் மீண்டும் சந்தித்து பேசவுள்ளோம். உத்தியோகபூர்வமாக முதன்முறையாக பேசியிருக்கின்றோம்.

நாம் எமது கட்சியை வளர்ப்பது தொடர்பில் சிந்திக்கின்றோம். அவர்கள் அவர்களது கட்சியை பாதுகாப்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இது தேர்தலை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் பேச்சுவார்த்தையல்ல. மிகப்பெரிய தேசிய கூட்டணி ஒன்றை அமைப்பதே எமது நோக்கம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தாராளவாத ஆட்சிக்கு எதிரான கூட்டணியே இது. இதுவே முக்கியமாக காரணம். நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய முன்னணியை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம். பிரச்சினைகளுக்கு செவிசாய்க்காத தலைவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். படிப்படியாக நாம் முன்னேறிச் செல்வோம். எதிர்காலத்திலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்சவும் ஒன்றிணையாமல் இந்த பயணத்;தை தொடர முடியாது. சாதாரண மனிதர்களின் எதிர்பார்ப்பும் அதுவே. இந்த அரசாங்கத்தை பதவியிறக்க எந்தவொரு அர்ப்பணிப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார்” என்றார்.

ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்

“நோக்கங்கள் தொடர்பில் எங்களுக்குள் வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அமைப்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லையென்பது எனது கருத்து. எனினும் அதற்குள் இருக்கும் முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதேவேளை டளஸ் அழகப்பெரும கருத்து தெரிவிக்கையில்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியதால் மாத்திரம், ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. ஆகவே அதற்கு எதிரான மிகப்பெரிய பலம்பொருந்திய அமைப்பு ஒன்றை உருவாக்குவது அவசியம். முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். நாங்கள் தேர்தலை இலக்காகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றோம்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க