ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிறதா சுவிஸ் அரசு? சாட்சியாளர்களுக்கு விசா வழங்க மறுப்பு!

253shares

இலங்கை தமிழர் பிரச்சினையில் சுவிஸ் அரசாங்கம் மாற்றுக் கொள்கைகளை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இலங்கை தீவில் நீதி மறுக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை கோருவதற்காக இருந்த ஒரே இடம் ஜெனிவா மனித உரிமை பேரவை. தற்போது அங்கு சென்று நீதி கோருவதற்கான வாய்ப்பை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் அளிக்க செல்ல திட்டமிட்டிருந்த பலரது விசா விண்ணப்பங்களை சுவிஸ் தூதரகம் நிராகரித்துள்ளது.

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலுமிருந்தும் விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த பலர் இம்முறை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சாட்சியமளிக்க செல்லவிருந்தனர். புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் இவர்களை அழைக்கும் ஏற்பாடுகளை செய்து, கூட்டங்களிற்கான முன்னாயத்தங்களையும் செய்திருந்தனர்.

யுத்தத்தின் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சாட்சியமளிக்க செல்ல விண்ணப்பிப்பவர்களிற்கு இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகம் தாராளமாக விசா வழங்கியிருந்தது. எனினும், இம்முறை வழமைக்கு மாறாக, விண்ணப்பித்த பெரும்பாலானவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே சுவிஸ் செல்லும் விசாவை வைத்திருந்த தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான நவநீதன் போன்ற மிகச்சிலர்தான் இம்முறை மனித உரிமைகள் கூட்டத் தொடரிற்கு இலங்கையிலிருந்து சென்றுள்ளனர்.

2009இல் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து உயிர்பிழைத்த ஒருவர், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் சாட்சியமளிக்க செல்லவிருந்தார். எனினும், அவரது விசா விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருந்தது. அந்த தாக்குதலில் அவரது இரண்டு கால்களையும் இழந்தார்.

விசா விண்ணப்பங்கள் தொழில்நுட்ப காரணங்களிற்காக அல்லாமல், கொள்கை முடிவின் அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இதையும் தவறாமல் படிங்க