ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வைத்து அதிகாரத்தை தக்கவைத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கம்!

7shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போதைய அரசாங்கமும் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக பயன்படுத்திக்கொண்டதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ள கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

தமது கணவர் உள்ளிட்ட அநீதிகள் இழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையானது ஸ்ரீலங்காவில் மெதுவாகவே நடைபெறுவதாகவும் இந்த வருடமாவது சில குற்றங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்படுமென தாம் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்மை தொடர்பில் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்பதால் இந்தப் பிரச்சினையை கடவுளிடம் ஒப்புவிக்கத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கமும் தமக்கு நீதியைப் பெற்றுத்தரவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் தான் போராட்டத்தை நடத்தியபோது அந்த இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததிருந்ததாகத் தெரிவித்த சந்தியா இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகைந்தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

'2015ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றது. வழக்குத் தாக்கல் செய்வதாகக் கூறினாலும் இதுவரை அதற்கான சாத்தியங்கள் கூட இல்லை. இந்த வருடமாவது விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம். இந்த அரசாங்கமும் குறிப்பாக ஜனாதிபதி தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக பயன்படுத்திக்கொண்டார். இன்று தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துகின்றார். ஸ்ரீலங்காவின் அரசியலில் குற்றங்களை முன்வைத்து தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்வார்கள். ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக பயன்படுத்திக்கொள்வார்கள். இதுவே இந்த நாட்டின் யதார்த்தம்'

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடுவார் எனின் அவரை தோல்வியடையச் செய்ய தாம் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராயின் அவருக்கு எதிரான பிரசாரத்தில் நான் நிச்சியம் பங்கேற்பேன். படுகொலைகளை புரிந்த கோட்டபாய போன்றவர்கள் ஜனாதிபதியாகக் கூடாது என்பது எனது கருத்து. ஏதோ ஒரு காரணத்துக்காக கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாவார் எனின் எனக்கு என்னைப்போன்ற பலரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனக்கு என்னுடைய பிள்ளைகளை இந்த நாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸில் தாம் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாகவும் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா விசனம் வெளியிட்டார்.

எனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். அதனைவிட நான் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். இதற்கு முன்னர் பிரகீத் எக்நெலிகொட டுபாயில் இருப்பதாக ஒருவர் தெரிவித்திருந்தார். நான் இதுத் தெடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவித்திருந்தேன். முறைப்பாட்டையும் செய்திருந்தேன் எனினும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றார்.

இதையும் தவறாமல் படிங்க