உயர்மட்ட அதிகாரிகள் மீது ஏன் பாய்வதில்லை சட்டம்

10shares

சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் கடற்படைத் தளபதி யாக கடமையாற்றியிருந்த அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட அரச படையினரில் சிலர் மேற்கொண்ட குற்றங்களுக்காகவே அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் பலர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கடைமட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மீது பாய்கின்ற சட்டம் ஏன் உயர்மட்ட அதிகாரிகள் மீது பாய்வதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

படுகொலை செய்யப்பட்ட ரக்பீ வீரர் வசீம் தாஜுடீன் உட்பட பல்வேறு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான முயற்சிகளை இரகசிய பொலிஸார் மேற்கொண்டபோது அதற்கெதிராக நீதிமன்றத்தை நாடிய அவர் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

அதேபோல கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணையில் சம்பவம் இடம்பெற்றபோது கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னாகொட இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவருகையில் அவரை கைது செய்வதற்கும் இரகசிய பொலிஸார் முயற்சி செய்தனர்.

எனினும் உடனடியாக நீதிமன்றத்தை நாடிய அட்மிரல் கரன்னாகொட தன்னை கைது செய்வதற்கெதிரான தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டார்.

இந்த சம்பவங்களை உதாரணமாகப் பயன்படுத்திய மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படையினரையும் போரை முன்நின்று வழிநடத்தியவர்களையும் பழிவாங்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான துஷார இந்துனில் போரில் ஈடுபட்டதற்காகவும் அதனை வழிநடத்தியதற்காகவும் அவர்கள் மீது விசாரணை செய்யவில்லை என்று விளங்கப்படுத்தியதோடு மாறாக போருக்குப் பின்னர் அவர்கள் இழைத்த குற்றங்களுக்காகவே விசாரணை செய்யப்படுவதாகவும் கூறினார்.

'டுபாயில் வைத்து கைதாகிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துரே மதுஸிற்காக அவரது உறவினர் ஒருவரால் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாகந்துரே மதுஸை கைது செய்வதற்கு ஸ்ரீலங்கா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியை நிறுத்துவதற்கான உத்தரவை பெற்றுக்கொடுக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இவ்வாறான முன்னுதாரணங்களை வழங்கியது யார்? கடந்த நாட்களில் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றபோது உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று கைது செய்வதை தடுப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரியிருந்தார். இரண்டுமுறை அவருக்கு இந்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அதேபோலவே அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் கைது செயவதை தவிர்ப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டார். கோட்டாபய, வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்கள் அடிக்கடி நீதிமன்றில் சென்று கைதை தடுப்பதற்கு கோரியமை போன்று முன்னர் இடம்பெற்றிருக்கிறதா? இல்லை.

படையினர் மீது அரசியல் பழிவாங்கும் படலத்தை ஐக்கிய தேசிய முன்னணி மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கூறிவருகின்றனர். அதனை தெளிவுபடுத்துகின்றேன். அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு காரணம், அவர் யுத்தத்தின்போது மேற்கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக அல்ல. அவர் கடற்படைத் தளபதியாக இருந்தபோது யுத்தத்தை முன்னெடுத்த மற்றும் தாக்குதல்களை நடத்தியதற்காகவும் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் அவருடைய பதவிக்காலத்தில் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்து இளைஞர்கள் 11 பேரை காணாமலாக்கிய விவகாரம் தொடர்பிலாகும். அண்மையில் வர்த்தகர்கள் இருவர் தென்னிலங்கையில் காணாமலாக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மீது விசாரணை நடத்தப்படுகின்றது. அவர்களும் பாதுகாப்பு சேவையில்தான் உள்ளனர். அவர்கள் மீது சட்டம் பாய்கின்றது என்றால், வசந்த கரன்னாகொட மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாதா? பிழையான முன்னுதாரணங்களை தொடர்ந்தும் சமூகத்துக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

இதையும் தவறாமல் படிங்க