ஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம்; அடித்துக்கூறும் ரணில் தரப்பு!

93shares

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று அடித்துக்கூறியுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, இதனை மிகத்தெளிவாக சர்வதேச சமூகத்திடம் எடுத்துக்கூறியதாலேயே சர்வதேசம் சிறிலங்காவிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

“ எமது இராணுவத்தின் மீது யுத்தக் குற்றங்கள் உள்ளது என நாம் ஏற்றுக் கொண்டிருப்போமெனின், ஐ.நா அமைப்பு ஸ்ரீலங்காவின் இராணுவ வீரர்களை சர்வதேச வேலைத்திட்டங்களுக்கோ, சர்வதேசத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவோ பிறநாடுகளுக்கு எமது இராணுவத்தினரை நியமிக்க மாட்டார்கள். அதுவே இன்று எழுந்துள்ள சர்ச்சைக்குறிய விவாதமாகும். மஹிந்த அணியினர் கூறுவது போல் நாம் எமது இராணுவத்தினர் யுத்தக்குற்றம் புறிந்துள்ளார்கள் என ஏற்றுக் கொண்டிருந்தால் ஐ.நா அமைப்பு மாலியில் கடமையாற்றிவரும் ஐ.நா அமைதி காக்கும் படையணிக்கு எமது நாட்டு இராணுவ வீரர்களை இணைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். எமது இராணுவத்தினர் மீது அவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லையென்பதை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். இராணுவத்தில் கடமைபுறியும் ஒருசிலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பல செயற்பாடுகளை செய்தால் அதனை முழுமையான இராணுவத்தினரின் செயற்பாடு என ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் இராணுவக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்காது. அத்தோடு அதற்கு சிறிலங்கா இராணுவம் பொறுப்புக் கூற வேண்டிய நிலையும் உருவாகாது. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் எமது அரசாங்கம், இவை தொடர்பில் சர்வதேசத்தினை தெளிவுபடுத்தி இராணுவத்தின் கௌரவத்தையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றியுள்ளோம். அரசில்ய குழப்பத்திற்காக அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எமது உறுதுியான நிலைப்பாடு சர்வதேசத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றிக்கு காரணமாகும்”.

எவ்வாறாயினும் போர் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட படைத் தளபதிகள் பலருக்கு வெளிநாடுகளில் வகித்த இராஜதந்திர பதவிகளை தொடர முடியாது நாடுதிரும்ப வேண்டிய கடடாயத்திற்கு தள்ளப்பட்டிருந்ததுடன், ஐ.நா அமைதி காக்கும் படையணிக்கு சென்றிருந்த உயர்நிலை படை அதிகாரியும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஸ்ரீலங்கா தொடர்பில் முன்வைத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்களை செயற்படுத்த முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலும், ஸ்ரீலங்காவால் சர்வதேசத்துடன் இணைந்து இணக்கப்பாடுடன் தொடர்ந்தும் செயற்பட முடிந்துள்ளமை பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் பெற்றுள்ள பாரிய வெற்றியென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது மஹிந்த ராஜபக்ச தன்னையும், ஸ்ரீலங்காவின் இராணுவ வீரர்களையும் மின்சார கதிரைக்கு அழைத்து செல்ல முயற்சிக்கின்றார்கள் என்றும், தன்னைக் காப்பாற்றுமாறும் தெரிவித்தார்.

எனினும் இன்று அந்த மின்னசாரக் கதிரை தொடர்பான பேச்சுக்கள் இல்லாமல் போயுள்ளது. இன்று மஹிந்த ராஜபக்ச எங்கும் சென்று தன்னை மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்று தெரிவிப்பதில்லை. அதற்கான காரணம் என்ன? எமக்கு 2015ஆம் ஆண்டு எமது அரசின் வெற்றியுடன் சர்வதேசத்தின் முன்னால் எமது விம்பத்தினை கட்டியெழுப்புவதுடன், சர்வதேசத்துடன் இணக்கப்பாட்டுடன் எமக்கு கடமைகளை மேற்கொள்ள முடியுமாக உள்ளது. இவ்வாறான நிலையில் அதுவே நாம் பெற்ற விசேட வெற்றியெக் கருதுகின்றேன்.

சர்வதேசம் இன்று நாம் கூறும் விடயங்களை ஏற்க ஆரம்பித்துள்ளது. அத்தோடு சர்வதேசமானது எமக்கு செவிசாய்க்கும் நிலையும் உருவாகியுள்ளது. 40 ஆவது மனித உரிமை பேரவையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு எமது செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதேசமயம் 43 ஆவது மனித உரிமைகள் பேரவையில் எமது செயற்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யவும் இணங்கியுள்ளது. அப்படியாயின் இவையே நாம் பெற்ற வெற்றிகளாகும்.

அதேவேளை எம்மீது கலப்பு நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்வது மற்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகமொன்றினை ஸ்ரீலங்காவிலும் ஆரம்பித்தல் ஆகிய யோசனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அவற்றுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தார். அத்தோடு அவர் அவர்கள் தெரிவிக்கும் இந்த விடயங்களை எமது நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் கீழ் மேற்கொள்ள முடியாது என வலியுறுத்தியிருந்தார்.

ஸ்ரீலங்காவை முதன் முறையாக சர்வதேசத்திடம் கொண்டு சென்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என சுகுற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், அதனால் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள அழுத்தங்களின் போது அரசாங்கத்தினை மஹிந்தவும் அவரது விசுவாசிகளும் சாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்வின் ஆட்சியின் போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவற்றை நிறைவேற்ற தவறியுள்ளனர். அன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் பெங் கி மூனுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தார். அதாவது யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உள்நாட்டு பொறிமுறையினை அமுல்படுத்துவதாக மஹிந்த வாக்குறுதியளித்தார். அதேவேளை ஜே.ஆர் இன் ஆட்சி காலத்தின் போது நாட்டில் பல கொலை சம்பவங்கள் பதிவாகியிருந்தன, எனினும் அவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடர்ப்பட்டன. அதேசமயம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட யுத்தத்துடன் தொடர்பற்ற பல கொலை சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அவை யுத்தத்தினை காபயன்படுத்திக்கொண்டு அன்றைய தலைவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு மேற்கொள்ளப்பட்டவையாகும். இவை சர்வதேசத்திற்கு சென்றதோடு சர்வதேசத்தின் கவனத்திற்கும் உட்பட்டது. இவை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவை பேச ஆரம்பித்தது. அத்தோடு இவ்வாறு பாதிப்பிற்குள்ளனவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் நீதி கோரி குரல் எழுப்பினர். எனினும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அவை எதற்கும் செவிசாய்க்கவில்லை. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து சட்டத்தை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. அதனால் இவற்றை சர்வதேசத்திடம் கொண்டு சென்றது மஹிந்த ராஜபக்சவே ஆவார். மாறாக நாம் சர்வதேசத்திடம் கொண்டு செல்லவில்லை. இவ்வாறு மஹிந்த ராஜபக்ச தரப்பு இந்த பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு செல்ல வாய்ப்பினை அளித்துவிட்டு தற்போது அதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக எம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தப்பித்துக்கொள்ள முயல்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி