யாழ்.மாநகர சபையில் கடும் அமளி! பொலிஸாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்!

64shares

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்ட கேபிள் இணைப்புக் கம்பங்களை அகற்றாமைக்கு முதல்வர் இ.ஆனோல்ட்க்கு எதிராக சபையில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் மாநகர சபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டதால் சபையை 10 நிமிடங்களுக்கு முதல்வர் ஒத்திவைத்தார்.

பின்னர் சபை குழப்பங்களுக்கு காரணமான விடயம் தொடர்பில் விளக்கமளிக்கையில், கம்பங்களை அகற்றாமைக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கப் பின்னடிப்பதே காரணம் என முதல்வர் சபையில் வெளிப்படுத்தினார். அத்துடன் பொலிஸாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் ஜனவரி மாத முற்பகுதியில் கம்பங்கள் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் பிரகாரம் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் முதல்வர் இ.ஆனோல்ட், கேபிள் கம்பங்களை அகற்றியமை சரியானது என யாழ்ப்பாணம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்தக் கட்டளையை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது கேபிள் நிறுவனம்.

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாகியும் சட்டத்துக்குப் புறம்பான கேபிள் கம்பங்களை முதல்வர் அகற்றாமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த பின்னடிப்புச் செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் முன்மொழிந்தார். அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வ.பார்த்திபன் வழிமொழிந்தார். பொலிஸாருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க