அடுத்த புதுவருட கொண்டாட்டம் மகிந்தவின் ஆட்சியிலேயே -நாமல் சபதம்!

12shares

சிறிலங்காவில் அடுத்த தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் கொண்டாடப்படும் என்று மஹிந்தவின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பொசன் பௌர்ணமி தினத்தன்று வீழ்த்தப் போவதாக மஹிந்தவாதிகள் சூளுரைத்துவந்த நிலையிலேயே தற்போது மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவும் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

சிறிலங்காவில் இந்த ஆண்டு முக்கியமான தேர்தல்கள் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல்களை இலக்குவைத்து பல்வேறு மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

இதற்கமைய தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்களை கவரும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச பயணிகள் ரயிலில் பயணம் செய்திருக்கின்றார்.

தென்மாகாணம் - மாத்தறையில் இருந்து பெலியத்த வரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரயில் பாதை பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ரயிலில் மஹிந்த ராஜபக்ச தனது விசுவாசிகளுடன் பயணித்துள்ளார்.

இதற்கமைய ஏப்ரல் பத்தாம் திகதியான நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 5 மணியளவில் மஹிந்த ராஜபக்ச தனது அணியினருடன் மாத்தறையில் இருந்து பெலியத்த வரை ரயிலில் பயணித்துள்ளார்.

இதன்போது மக்களையும் சந்தித்தார். இதன்மூலம் அவரின் ஆதவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு மஹிந்த ராஜபக்ச ரயிலில் பயணித்த ஒவ்வொரு பகுதிகளிலும் பட்டாசுகளைக் கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது போனதால் சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ள செல்வாக்கை எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக சரிசெய்துகொள்ளும் முயற்சியில் தீவிரம் காண்பித்துவரும் மஹிந்த ராஜபக்ச, அதன் ஒரு கடடமாகவே மக்களுடன் இணைந்து இந்த ரயில் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

இதேவேளை மஹிந்தவுடன் ரயில் பயணத்தில் இணைந்திருந்த அவரது புதல்வரான சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அடுத்த சிங்கள – தமிழ் புத்தாண்டினை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்போவதாக நம்பிக்கை வெளியிட்டார்.

‘மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போடும் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதற்கு மேலேயும் நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்திடம் கேட்கின்றோம். இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்காக மக்கள் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். நிச்சயமாக புதிய கூட்டணி ஊடாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தை உருவாக்குவதோடு அதனூடாக வடக்கையும் – தெற்கையும் இணைப்பதற்கு முடியும்”

இதேவேளை எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு தங்களது அதிகார பலத்தை காண்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இம்முறை மே தினக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ள மஹிந்தவின் தாமரை மொட்டுக் கட்சியினர்,அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான தலைமைப் பொறுப்பை மஹிந்தவின் புதல்வரான நாமல் ராஜபக்சவிடம் கையளித்திருக்கின்றனர்.

இதற்கமைய மே தின ஏற்பாட்டுக் கூட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடத்திவரும் பொதுஜன பெரமுனவினர், தலைநகர் கொழும்பில் மே தினத்தன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்துக்காக எதிர்வரும் 26 ஆம் திகதியே நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொழும்பை நோக்கி பேரணிகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

“கொழும்புக்கான பயணம் - வெற்றியை நோக்கிய போராட்டம்” என்ற தொனிப்பொருளில் திருகோணமலை, அநுராதபுரம், தம்புளை, தங்காலை,குருநாகலை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த கூட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க