பரபரப்பின் மத்தியில் சற்றுமுன் நாடுதிரும்பிய கோட்டா; நாளை மீண்டும் தடை!!

706shares

அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் ஸ்ரீலங்காவுக்கு திரும்பியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வரவேற்பு பகுதியைச் சூழ்ந்திருந்த பெருமளவிலான ஆதரவாளர்கள் எதிர்கால ஜனாதிபதியே வாழ்க என்றும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரே வாழ்க எனவும் கோஷமிட்டு வரவேற்பளித்தனர்.

திருமண நிகழ்வொன்றுக்கான கடந்த மாத இறுதியில் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான கோட்டபாய ராஜபக்ச அமெரிக்கா நோக்கி பயணித்திருந்தார்.

அமெரிக்கா சென்ற அவருக்கெதிராக ஏப்ரல் ஏழாம் திகதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றமொன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான அறிவித்தல்கள் கையளிக்கப்பட்டன.

கொழும்பு ரத்மலானை பகுதியில் வைத்து 2009ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை பதிவுசெய்திருந்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்த வுஐனு என்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2007 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை தடுத்துவைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி கனேடிய பிரஜையான ஈழத்தமிழர் ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில் உலகின் முன்னணி சட்ட நிறுவனமான ஹவுஸ்பெல்ட் சர்வதேச சட்ட நிறுவனமும், சிறிலங்காவின் நீதிக்கும், உண்மைக்குமான செயற்திட்டமும் இணைந்து இந்த வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

ஒருபுறத்தில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் மஹிந்த - கோட்டா விசுவாசிகள் தீவிரமாக ஈடுபட்டதோடு மறுபுறத்தில் ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகளும் சர்வதேச தரப்பில் இடம்பெற்றன.

இந்த நிலையிலேயே அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் ஸ்ரீலங்கா நேரப்படி காலை 8.35 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், அவரது ஆதரவாளர்களும் வரவேற்பு பகுதியிலிருந்து அவரை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றதோடு எதிர்கால ஜனாதிபதியே வாழ்க, போரை முடித்த தலைவரே வாழ்க என்ற கோஷமும் எழுப்பினர்.

பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, தனக்கெதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும், ஸ்ரீலங்காவிலுள்ள சிலரும் செயற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியதோடு, அமெரிக்கா கலிபோர்னிய கொன்செல் அலுவலகமும் இதற்கு ஒத்துழைத்திருப்பது கவலைக்குரிய செயற்பாடாகும் என்றும் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள மக்களும் அதேபோல நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளும் பாரியளவான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள். ஏனென்றால் இவை அரசியல் ரீதியான நோக்கத்திற்காக செய்யப்பட்டவை. இதற்கு முன்னர் குறைந்தது 10 தடவைகள் அமெரிக்காவிற்கு சென்றுவந்துள்ளேன்.

அப்போது அந்த தரப்பினர் எந்தவொரு சிவில் வழக்கையும், நட்டஈட்டையும் கோரியிருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலை சம்பந்தப்படுத்தி செய்யப்பட்டதாகும். இதற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர்ந்த சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும் அதேபோல ஸ்ரீலங்காவிலுள்ள சில தரப்பினரும் அதேவேளை சொல்வதற்கும் கவலையடைகிறேன், கலிபோர்னியாவிலுள்ள கொன்சல் அலுவலகமும் இதற்கு ஒத்துழைத்தது.

இப்படியான கீழ்த்தர அரசியலை செய்வது மிகவும் அநீதியாகும். இந்த காலகட்டத்திற்குள் நான் பாதுகாப்புச் செயலாளரான மேற்கொண்ட பணிகளையும், நாட்டையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். தனக்கெதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் அவற்றை இரத்து செய்வதற்கான முயற்சிகளை தனது சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவிற்கு நான் சென்ற அடிப்படைக் காரணம், அந்நாட்டு குடியுரிமையை இரத்து செய்வதற்காக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து தேவையான செயற்பாடுகளை செய்வதற்காகும். அவற்றை வெற்றிகரமாக செய்துகொண்டேன். இங்கிருந்துதான் இரத்து செய்வதற்கான எஞ்சிய பணிகளை செய்ய வேண்டும். நான் கூறியவுடன்; அங்கே அவர்கள் சென்று கையளித்துவிடுவார்கள்.

இந்த காலகட்டத்தில்தால் நான் பாதுகாப்புச் செயலாளராக கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றியபோது ஊடகவியலாளர் ஒருவரது மரணத்திற்கும், அதேபோல கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பாக சிவில் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

பாதுகாப்புச் செயலாளராக நான் அதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும், அவர்களுக்கு பணரீதியில் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் நோட்டீஸ் ஸ்ரீலங்காவில் போலல்லாமல், சிவில் நிறுவனங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும். எனக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்படவில்லை. எனினும் அங்குள்ள எனது சட்டத்தரணிகளால் அதனை இரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க