தாயகத்தில் உதயமானது நாய்களுக்கான சரணாலயம்!

  • Jesi
  • April 12, 2019
67shares

பளை இயக்கச்சி பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள நாய்களுக்காக சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் நாய்கள் சரணாலயத்தை நிறுவியுள்ளது.

நாய்கள் சரணாலயத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(12) பிற்பகல்-04 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன், வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

குறித்த நாய்கள் சரணாலயம் 20 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் சிவபூமி நாய்கள் சரணாலயத் திறப்பு விழாவுக்காக அனைவரும் குடும்பம் குடும்பமாக வருகைதர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் குடும்பம் குடும்பமாக செய்த தவறுக்காகத் தான் தற்போது காப்பகம் அமைக்க வேண்டியுள்ளது. எனவே, எங்களது கர்ம வினைகளிலிருந்து போக்குவதற்காக நாய்களுக்கான சரணாலயம் அமைக்க வேண்டியது தற்போது உச்சமாகி விட்டது.

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பேராயிரவரின் மகள் செல்வி ரோகினி பேராயிரவர் அன்பளிப்பாகத் தந்த நிலத்தில் தான் நாய்களுக்கான காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நாய்களுக்கான சரணாலய ஆரம்ப வேலைகளைக் கடந்த மூன்று வருடத்துக்கு முன்னரே முன்னெடுத்திருந்தோம்.

குறித்த காணி காடாகிப் போய்விட்ட நிலையில் இரவு,பகலாக 20 ஏக்கர் நிலமும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த 20 ஏக்கர் நிலத்திலும் நாய்கள் சுதந்திரமாக ஓடித் திரியலாம்.

பலரும் கூட்டில் அடைக்கப் போகிறீர்களா? நாய்கள் குளிப்பது எங்கே? எனக் கேள்வி கேட்கிறார்கள். பக்கத்தில் ஒரு குளம் உள்ளது. நாய்கள் விரும்பினால் அங்கு குளிக்கலாம். காலப் போக்கில் மேலைத்தேய நாடுகளில் நாய்களைப் பராமரிப்பவர்கள் இங்கு வருகை தந்து தொண்டு செய்ய ஆவலாகவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள நாய்களுக்குச் சத்திர சிகிச்சை நடந்துள்ளது. ஒரு கற்ற சமூகமான பல்கலைக்கழக சமூகத்திலிருந்து தான் நாங்கள் முதன்முதலாக நாய்களைத் தத்தெடுக்கவுள்ளோம். திருமதி- இராமலிங்கம் இந்த நாய்களுக்கான சத்திர சிகிச்சையைச் செய்து முடித்துள்ளார்.

அடுத்தகட்டமாகத் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் உள்வாங்கப்படவுள்ளன. தற்போதைய நிலையிலேயே சத்திர சிகிச்சை செய்யப்பட்ட 120 நாய்கள் எங்கள் கைவசமுள்ளன.

தவத்திரு யோகர் சுவாமிகள் யாழ்ப்பாணத்துக் கறுமாரிகளிலொன்று தெருவில் நாய்களை விடுவதெனக் குறிப்பிட்டிருந்தார். எப்போது தெருவில் நாய்களை கொண்டு சென்று விட ஆரம்பித்தார்களோ அப்போதே எங்களுடைய பொம்பிளைப் பிள்ளையளையும் பிடிச்சுக் கொண்டு போய் எங்கோயோ விடப் போகின்றீர்களெனத் தெரிவித்தார். அவர் கூறியது தற்போது உண்மையாகி விட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள பொம்பிளைப் பிள்ளைகளெல்லாம் கனடா, இலண்டன் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள், இதனால்,எங்களுடைய சொந்தக்காரப் பிள்ளைகளையே நேரில் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாய்கள் சரணாலயத்தில் முதற்கட்டமாக விடப்பட்டுள்ள நாய்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மூட்டை அரிசி தேவையெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இங்குள்ள நாய்க்களுக்குத் தினமும் சோறும், சாம்பாரும் மதிய உணவாக வழங்கப்படும். இங்குள்ள நாய்களுக்கு மாமிச உணவுகள் எதுவும் வழங்கப்படாது. அனைத்தும் சுத்த சைவ நாய்கள்.

சந்திர மண்டலத்துக்கு நாய்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் தற்போது நாய்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.இந்த நிலையில் தான் நாங்கள் இயக்கச்சிக்கு நாய்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதையும் தவறாமல் படிங்க