அமெரிக்க வழக்கிற்கு சிறிலங்கா கொன்சியூலர் அலுவலகமும் துணை: கோட்டாபய பகிரங்க குற்றச்சாட்டு!

48shares

அமெரிக்காவில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு சிறிலங்கா அரசின் கலிபோர்னியாவிற்கான கொண்சூயூலர் அலுவலகம் உதவியிருப்பதாக கோட்டாபய ராஜபக்ச பாரதூரமான குற்றச்சாட்டொன்றை சுமத்தியிருக்கின்றார்.

அமெரிக்காவில் இருந்து இன்றைய தினம் நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதுடன், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக தான் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை இதன்மூலம் கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் கவலை வெளியிட்டிருகின்றார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்காக நாட்டின் பல இடங்களில்இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த அவரது ஆதரவாளர்கள் எதிர்கால ஜனாதிபதியே வாழ்க என்றும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரே வாழ்க எனவும் கோஷமிட்டு வரவேற்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான கோட்டபாய ராஜபக்ச கடந்த மாத இறுதியில் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தின் மாவட்ட நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகள் தொடர்பில் ஏப்ரல் ஏழாம் திகதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டாபய ராஜபக்சவிடம் அறிவித்தல்கள் கையளிக்கப்பட்டன.

கொழும்பு ரத்மலானை பகுதியில் வைத்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க அவரது தந்தையின் படுகொலையுடன் கோட்டாபய ராஜபக்ச தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டி வழக்கொன்றை பதிவுசெய்திருந்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்த TID என்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2007 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை தடுத்துவைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி கனேடிய பிரஜையான ஈழத்தமிழர் ரோய் மனோஜ்குமார் சமாதானம் நட்டஈடு கோரி வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரோய் சமாதானம் சார்பில் உலகின் முன்னணி சட்ட நிறுவனமான ஹவுஸ்பெல்ட் சர்வதேச சட்ட நிறுவனமும், தென் ஆபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP என்ற நீதிக்கும் - உண்மைக்குமான செயற்திட்டமும் இணைந்து இந்த வழக்கை அமெரிக்காவின் கெலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் மஹிந்த - கோட்டா விசுவாசிகள் சிறிலங்காவில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மறுபுறத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்காவின் அரச அதிகாரிகள் மற்றும் படைத் தளபதிகளுக்கு எதிராக போர்க் குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை அடிப்படையாக வைத்து அந்ததந்த நாடுகளில் வழக்குகளை தொடர்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களும், புலம்பெயர் அமைப்புக்களும் அதிக நாட்டம் காண்பித்து வருவதாக ITJP நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா ஐ.பீ.சீ தமிழுக்கு லண்டனில் வைத்து வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் ஸ்ரீலங்கா நேரப்படி காலை 8.35 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் உட்பட அவரது ஆதரவாளர்களும் விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் கூடி பெரும் ஆரவாரத்துடன் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்றதோடு எதிர்கால ஜனாதிபதியே வாழ்க, போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரே வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினர்.

இதனையடுத்து பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் அங்கு வந்திருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச, தனக்கெதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனம் மாத்திரமன்றி,ஸ்ரீலங்காவிலுள்ள சிலரும் அதேபோல் அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள கொன்சியூலர் அலுவலகமும் ஒத்துழைத்திருப்பதாக குற்றமச்சாட்டினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள மக்களும் அதேபோல நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளும் பாரியளவான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள். ஏனென்றால் எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அரசியல் ரீதியான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை.

இதற்கு முன்னர் குறைந்தது 10 தடவைகள் அமெரிக்காவிற்கு சென்று திரும்பியிருக்கின்றேன். அப்போது அந்த தரப்பினர் எந்தவொரு சிவில் வழக்கையும், நட்டஈட்டையும் கோரியிருக்கவில்லை. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்படுத்தி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர்ந்த சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும் அதேபோல ஸ்ரீலங்காவிலுள்ள சில தரப்பினரும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அதேவேளை இதனை சொல்வதற்கும் கவலையடைகிறேன். கலிபோர்னியாவிலுள்ள எமது கொன்ஸ்சியூலர் அலுவலகமும் இதற்கு ஒத்துழைத்துள்ளது. இப்படியான கீழ்த்தரமான அரசியலை செய்வது மிகவும் கொடூரமானது. இந்த நடவடிக்கைகள் ஊடாக நான் பாதுகாப்புச் செயலாளராக மேற்கொண்ட பணிகளையும், நாட்டையும் இவர்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சிறிலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ச, இன்னமும் அவரது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு விண்ணப்பிக்கவில்லை என்ற தகவலையும் இன்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் முன்னிலையில் தெரியப்படுத்தினார்.

எனினும் அதற்கான ஆயத்தப் பணிகளை தான் இம்முறை அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த கோட்டாபய, அமெரிக்காவில் தனக்கெதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமலேயே அவற்றை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் தனது சட்டத்தரணிகள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்காக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே நான் இம்முறை அமெரிக்கா சென்றதற்கு அடிப்படைக் காரணம். அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்துகொண்டேன். இங்கிருந்துதான் இரத்து செய்வதற்கான எஞ்சிய பணிகளை செய்ய வேண்டும். நான் கூறியவுடன் அங்கே அவர்கள் சென்று எனது விண்ணப்பத்தை கையளித்துவிடுவார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் நான் பாதுகாப்புச் செயலாளராக கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றியபோது ஊடகவியலாளர் ஒருவரது மரணத்திற்கும், அதேபோல கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பாகவும் சிவில் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

பாதுகாப்புச் செயலாளராக நான் அதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும், அவர்களுக்கு பணரீதியில் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கு அந்த வழக்குகளின் அறிவித்தல்கள், ஸ்ரீலங்காவில் போலல்லாமல் சிவில் நிறுவனங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும். எனினம் எனக்கு முறைப்படி அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. எனினும் அங்குள்ள எனது சட்டத்தரணிகள் அதனை இரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இதனையடுத்து விமான நிலைய வாசல் பகுதியிலும், வாகனத் தரிப்பிடத்திலும் திரண்டிருந்த ஏராளமான ஆதரவாளர்களின் உற்சாகமான கோசங்களுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவை அவரது மெய்ப் பாதுகாவலர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதையும் தவறாமல் படிங்க