அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா புறப்பட்ட மைத்திரி!

40shares

ஸ்ரீலங்காவில் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது சுதந்திரக் கட்சி குழுவினருடன் திருப்பதியில் வழிபடுவதற்காக இந்தியா சென்றுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டணி அமைப்பதில் இழுபறியை சந்தித்துள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் சவாலுக்கு மத்தியில் பயணிக்கின்ற நிலையிலேயே இந்தியாவுக்கான தனது விஜயத்தினை இன்றைய தினம் மேற்கொண்டிருக்கின்றார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதோடு இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த வருட இறுதியில் விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தலை இலக்குவைத்து கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்களை பிரதான கட்சிகள் நடத்திவருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கூட்டணிப் பேச்சுக்களை நடத்தியிருந்த நிலையில் நான்காம்கட்ட பேச்சு எதிர்வரும் மே 09ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இருப்பினும் இந்தப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் இருதரப்பினரிடையேயும் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதோடு, பகிரங்கமாகவே தற்போது ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக மைத்திரி – மஹிந்த கூட்டணி அமைக்கின்ற முயற்சிகள் கைவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மைத்திரி – மஹிந்த தரப்பினருக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் தேர்தலை இலக்குவைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுக்களை நடத்திவருகின்றது.

எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறும் மே தினக் கூட்டத்தின்போது இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகின்றது.

இப்படியான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கின்ற நிலையில் இன்றைய தினம் திருப்பதியில் வழிபடுவதற்காக இந்தியா சென்றுள்ளார்.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபடும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, அதனையடுத்து பெங்களுர் சென்று இந்திய உயர் பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

இதையும் தவறாமல் படிங்க