உலகெங்கும் அகலக்கால் பதிக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் 4ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

129shares

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஐந்தாவது ஆண்டில் கால் தடம் பதிக்கின்றது. இந்த மைல் கல்லை எட்டும் தருணத்தில் கனடாவின் ரொரண்டோ நகரில் ஐ.பி.சி தமிழா 2019 என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியையும் ஐ.பி.சி தமிழ் ஏற்பாடு செய்துள்ளது.

புலம்பெயர்ந்த தேசத்தில் வானொலியாக தனது தடத்தை பதித்த ஐ.பி.சி தமிழ், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தொலைக்காட்சி சேவையாகவும் புதிய பரிமாணத்தை எட்டியது.

லண்டனை தளமாக கொண்டியங்கிய ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் தனது ஒளி மற்றும் ஒலிபரப்பை விஸ்தரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட கலையகத்தை திறந்த ஐ.பி.சி தமிழ், இந்தியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் செயற்பட்டுவருகின்றது.

பல்வேறு சவால்களைக் கடந்து தமிழ் தேசியம் சார்ந்த இலக்குடன் பல்வேறு நிகழ்ச்சிகளையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக தருவதில் ஐ.பி.சி தமிழ் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.

இதன் ஒர் அங்கமாக உலகளாவிய ரீதியிலுள்ள ஆயிரம் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்குடன் ஐ.பி.சி தமிழா 2019 நிகழ்ச்சியை கனடாவில் நடத்துவதற்கும் ஐ.பி.சி தமிழ் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அத்தோடு ஈழக் கலைஞர்களின் திரைத் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் குறுந்திரை போட்டியொன்றையும் ஐ.பி.சி தமிழ் நடத்தியிருந்தது.

இதன்மூலம் இரண்டு முழு நீளத் திரைப்படங்களை தயாரிப்பதற்கான வாய்ப்புக்களையும் ஐ.சி.பி தமிழ் , தாயக இயக்குநர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

தொலைகாட்சியில் வணக்கம் தமிழ், வணக்கம் தாய்நாடு போன்ற நிகழ்ச்சிகள் ஊடாக தமிழர்களின் அடையாளங்களை வெளிக்கொண்டுவரும் ஐ.பி.சி தமிழ், சக்கர வியூகம், அக்கினிப்பார்வை, தீர்ப்பாயம் போன்ற நிகழ்ச்சிகள் ஊடாக தமிழர் நலன் சார்ந்த அரசியல் விடயங்களை முன்னிறுத்துகின்றது.

என் இனமே என் சனமே மற்றும் உறவுப் பாலம் போன்ற நிகழ்ச்சிகள், போரின் பின்னரான மக்களின் பிரச்சினைகள் உலகுக்கு கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஈழ நடப்புக்களை மாத்திரமன்றி, உலக நடப்புக்களையும் பிரதிபலிக்கும் வகையில் நாளாந்தம் ஐ.பி.சி தமிழ் செய்திகளும் உடனுக்குடன் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஊடாக வழங்கப்பட்டும் வருகின்றன.

ஒரே ஒரு அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி தற்போது ஐ.பி.சி தமிழ் பக்தி, ஐ.பி.சி தமிழ் மழலை, ஐ.பி.சி தமிழ் பகிடி என்ற ஏனைய பல அலைவரிசைகளாகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐ.பி.சி தமிழ் குடும்பத்தின் தலைவரின் எண்ணக்கருவின் கீழ் மாதம் தோறும் ஐந்தாம் திகதியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் உயிர்ச்சுவடு வேலைத்திட்டத்தையும் ஐ.பி.சி தமிழ் முன்னெடுத்துவருகின்றது.

இந்த திட்டங்களின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைகளை பெற்றுவருவதுடன், சமூகத்திலுள்ளவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க