யேசுகிறிஸ்து உயிர் நீத்த நாளான இன்று வவுனியாவில் நடக்கும் பெரும் கூத்து; கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள்!

668shares

கிறிஸ்த்தவர்களின் மீட்பரான யேசுகிறிஸ்து உயிர்நீத்த நாளான இன்றைய தினம் வவுனியாவில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவது வவுனியா வாழ் கிறிஸ்தவ மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் கல்வி செயற்திட்டத்தின் பெயரில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் தென்னிந்திய இசைக் கலைஞர்கள் பங்குபற்றும் இசை நிகழ்ச்சியொன்று இன்றையதினம் (19,04,2019) வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்றையநாள் கிறித்தவ மக்களின் இறை தூதராக கருதப்படும் யேசுகிறிஸ்து மக்களின் பாவங்களை சுமந்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து விரதமிருந்து சோகநாளாக அனுஷ்டிக்கும் பெரிய வெள்ளி என கூறப்படும் இந்த புனித நாளில் இவ்வாறான இசை நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது தமக்கு வேதனையளிப்பதாக சில கிறிஸ்தவ மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி என்ற செயற்திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நல்ல நோக்கத்திற்காக இடம்பெற்றாலும், அந்த நிகழ்வின் தன்மை பணம்கொடுத்து அனுமதி சீட்டு வாங்கிச்செல்லும் களியாட்ட நிகழ்வு என்பதால் இந்த புனித நாளை தவிர்த்து பிறிதொரு நாளில் இதை நடத்தியிருக்கலாம், ஒரு சிலருக்கு உதவுவதாக நினைத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளை மலினப்படுத்துவதை வவுனியா வர்த்தகர் சங்கம் தவிர்த்திருக்கலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் ஆதங்கத்துடன் எமக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கில் மத முரண்பாடுகள் தலைதூக்கிவரும் நிலையில் அதிகமான இந்துக்களை உறுப்பினர்களாகக்கொண்ட வவுனியா வர்த்தகர் சங்கம் இவ்வாறு நடந்துகொள்வது வவுனியாவில் சிறுபான்மையாக வாழும் கிறிஸ்தவர்களை மனவேதனையடைய வைத்துள்ளது என்பதனால், வவுனியா நகரின் பொறுப்புவாய்ந்த சங்கம் என்ற ரீதியில் வர்த்தகசங்கம் இன்றையநாளில் இந்த நிகழ்வை தவிர்த்திருக்கலாம், பெரிய வெள்ளியை பிறிதொரு நாளுக்கு மாற்ற முடியாது என்பதனால் இசைநிகழ்வை பிறிதொருநாளுக்கு மாற்றியிருக்கலாம் என்பதே கிறிஸ்தவ மற்றும் இந்துமக்களின் கருத்தாகவுமுள்ளது.

இனி வரும் காலங்களில் பொது அமைப்புகள் இப்படியான நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது கூடுதல் கவனம் எடுத்தால் நன்று.

இதேவேளை இன்றையநாள் இந்துக்களும் தமது இறந்த ஆத்மாக்களுக்காக விரதமிருக்கும் சித்திரை முழுமதி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க