சபாநாயகருக்கும் வந்த ஜனாதிபதி ஆசை!

55shares

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் தாம் எவ்வித கோரிக்கையையும் முன்வைக்க வில்லை எனவும், எனினும் அவ்வாறான ஒரு வாய்ப்பு தமக்கு வரும் பட்சத்தில் அது தொடர்பில் சிந்திக்க முடியுமெனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும், எதிர்கால சந்ததியின் தலையில் அந்தச் சுமையை இறக்கிவைக்கக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட கரு ஜயசூரிய, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்து நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், தேரரின் ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைவிட ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறவுள்ளது. இரண்டு தேர்தல்களையும் சரியான நேரத்தில் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். நான் இதுவரை காலமும் எந்தவொரு பதவியையும் கோரியதில்லை. எனக்குக் கிடைத்த அனைத்துப் பதவிகளும் எனக்குக் கிடைத்ததே தவிர நான் கேட்டுப் பெறவில்லை. எனினும் எதிர்காலத்தில் என்ன நடக்குமென பொறுத்திருந்து பார்ப்போம். எனக்கு அவ்வாறான ஒரு எண்ணம் இல்லை. எனினும் எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினதும் ஆதரவுடன் அவ்வாறான ஒரு கருத்துருவாக்கம் வந்தால் சிந்தித்துப் பார்ப்போம். நாட்டில் தற்போது காணப்படும் இந்தப் பிரச்சினையை அடுத்த தலைமுறையின் தலையில் சுமத்த வேண்டாமென நான் தொடர்ச்சியாக இந்த நாட்டு அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தி வருகின்றேன். இது தொடர்பில் பேசி ஒரு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லாவிடின் புலம்பெயர் மக்களும், ஏனைய தரப்பினரும் இதில் தலையீடு செய்து இந்தப் பிரச்சினையை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுபோவார்கள். எதிர்காலத்தில் எவ்வாறான வாய்ப்புகள் வந்தாலும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும் என்னுடைய கடமையை நான் நிறைவேற்றுவேன்.

இந்த வருடமானது மிகவும் சவாலாக அமையுமென மாகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியதாகவும், இன, மத, அரசியல் பேதங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மிகவும் சவாலானதான அமையுமென்ற விடயத்தை மகாநாயக்கர்கள் என்னிடம் வலியுறுத்தினார்கள். 71 வருட சுதந்திரத்தை அனுபவிக்கும் எம் மக்களுக்கு நிறையவே உரிமைகள் இல்லாமல் போயுள்ளன. ஜப்பானுடன் சரிசமமாக இருந்த எமது நாடு இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதற்குக் காரணம் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள், அது மாத்திரமன்றி 30 வருட யுத்தம் என பல காரணங்களால் எமது நாடு பின்நோக்கிச் சென்றது. அதனைவிட எமது நாட்டில் காணப்பட்ட இன, மத, அரசியல் பேதங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியது எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க