ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் நாடகம் - ஜனாதிபதி,பிரதமர்,படைத்தளபதிகளுக்கிடையே வெளிப்பட்ட முரண்பாடு!

614shares

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தாக்குதலை அடுத்து ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டு மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் நாடகம் என்ற தலைப்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கொழும்பில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடந்த ஞாயிறன்று காலை 9.05 மணிக்கு தனது செயலாளர் சமன் எக்கநாயக்கவை தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் பெந்தோட்டையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்து கொண்டிருப்பதாகவும் எனவே அவரை சந்திக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பின்னர் 9.15 மணியளவில் செயலாளர் சமன் எக்கநாயக்க பிரதமருடன் தொடர்பு கொண்டு பொலிஸ் மா அதிபர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படைத்தளபதிகளை அழைத்து சந்திக்கவேண்டுமெனத் தெரிவித்தபோது அதற்கு பிரதமரும் இணக்கம் தெரிவித்தார்.

இதன்போது பிரதமரின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரதமரை சந்திக்க வேண்டும் என கூறியபோது தாம் சில வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் 10.30 மணிக்கு அலரி மாளிகைக்கு வருவதாக தெரிவி த்தனர்.எனினும் செயலாளர் 10.20 மணிக்கு மீளவும் படைத்தளபதிகளை தொடர்பு கொண்டபோது தமது வேலை நிறைவடையவில்லை எனவும் பிரதமரை பின்னர் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது செயலாளர் இது தொடர்பாக பிரதமருக்கு தெரியப்படுத்தி அவர்கள் சந்திப்புக்கு வரமாட்டார்கள் என்ற விடயத்தை தெரியப்படுத்தினார்.எனினும் தனது காரை உடனடியாக தயார்படுத்துமாறும் படைத் தளபதிகளை தான் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பதாகவும் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

முற்பகல் 10.30 மணிக்கு பிரதமர் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்றபோதிலும் அங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்து பிரதமரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.எனினும் பிரதமர் என்றபடியால் உள்ளே அனுமதிக்குமாறு பிரதமரின் செயலாளர் கேட்டபோதும் பாதுகாப்பு அதிகாரிகள் அதனை ஏற்கமறுத்துவிட்டனர்.

பின்னர் அங்கிருந்த இராஜாங்க அமைச்சர் ருவனின் அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் அங்கு பாதுகாப்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அதில் முக்கியமான தளபதிகள் எவரும் பங்கேற்கவில்லை.பிரதமரின் பாதுகாப்பு கூட்டத்துக்கு படைத்தளபதிகள் ஏன் வரவில்லை என்ற காரணம் தெரியவில்லை.

இலங்கை வரலாற்றில் பிரதமர் ஒருவரின் அழைப்பை படைத்தளபதிகள் நிராகரித்திருப்பது இதுவே முதற்தடவை என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து முற்பகல் 11.45 மணிக்கு அலரிமாளிகைக்கு திரும்பிய பிரதமர் ரணில்,சிரேஷ்ட அமைச்சர்களை சந்தித்து மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டத்துக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளை அழைக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவை தொடர்பு கொண்டு அன்றைய கூட்டம் தொடர்பில் விளக்கியதுடன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளும் பங்கேற்கவேண்டுமெனத் தெரிவித்தார். எனினும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் சிலவேலைகளில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எனவே அவர்கள் அமைச்சரவை கூட்டத்துக்கு தமது வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமாட்டார்கள் என உதய செனவிரத்ன தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தவில்லை எனவும் சமூக வலைப்பின்னல் ஜனாதிபதி நாடு திரும்பும்வரை தடைசெய்யப்படமாட்டாதெனவும் தெரிவித்தார்.

எனினும் அன்றுமாலை இடம்பெற்ற தெமட்டகொட,தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து உடனடியாக ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் ரணில் உத்தரவிட்டார் என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க