விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!! வெளிவந்த கண்டன அறிக்கை

171shares

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"காந்தியை சுட்டுப் படுகொலை செய்தது இந்துத்துவவாதி கோட்சே. கொன்றுவிட்டு பழியை முஸ்லிம் மீது போடுவதற்காக, முஸ்லிம் பெயரை கையில் அவன் பச்சைக் குத்தியிருந்ததாகச் சொல்கிறார்கள். என்னே அவனது தந்திரம்!

கோட்சேவின் இந்தத் தந்திரத்திற்கு சற்றும் குறையாதது பாஜகவின் தந்திரமும்.

அதாவது 2009-ல் முள்ளிவாய்க்காலில் இந்திய அரசின் துணையுடன் 1.5 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்தார் ராஜபக்சே. இதனை காங்கிரஸ், திமுக செய்ததாக சொல்லி அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக.

ஆனால் உண்மை என்ன? அங்கு இனப்படுகொலை நடந்தபோது அதற்கு எதிராக பாஜக குரலாவது கொடுத்ததுண்டா? இனப்படுகொலை நடந்தபின் அதைக் கண்டித்ததாவது உண்டா?

மாறாக இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுக்கும் அதற்குத் துணைபுரிந்த இந்திய அரசுக்கும்தான் துணைநின்றது பாஜக.

மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மோடியின் பிரதமர் பதவியேற்பு வைபோகத்திற்கு அவரது மாப்பிள்ளைத் தோழன் போல் அழைக்கப்பட்டவரே ராஜபக்சேதான்.

இன்றுவரை ஈழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காதவாறு பன்னாட்டு விசாரணையைத் தடுத்து இலங்கை அரசுக்கு உதவி வருவதும் மோடி அரசுதான்.

அவ்வளவு ஏன், 28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை, 161 ஆவது சட்டப் பிரிவின்கீழ் தமிழக அரசே விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறிவிட்டபிறகும், அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, அவர்களின் விடுதலைத் தீர்மானத்தில் ஆளுநரைக் கையெழுத்திடாதவாறு தடுத்து வைத்திருப்பதும் பாஜக மோடி அரசுதான்.

இதே இந்திய அரசுதான், இங்கு இல்லாத விடுதலைப் புலிகளுக்கு இப்போது தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செய்ததற்கும் கூடுதலாக பாசக செய்வதற்குக் காரணம் என்ன?

இந்துத்துவ சனாதனக் கட்சியாக இருப்பதுதான். காங்கிரஸ் மிதமான இந்துத்துவா என்றால் பாஜக தீவிரமான இந்துத்துவா.

இப்போது மத்திய அதிகாரத்தில் இருப்பதால் அதிதீவிர, அதிபயங்கரவாத இந்துத்துவாவாக மாறியிருக்கிறது பாஜக. ஆக, ஈழத் தமிழர் இனப்படுகொலையை அரங்கேற்றியது இந்துத்துவ சனாதனம் என்பதுதான் உண்மை!

விடுதலைப் புலிகள் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்ததற்கு பாசக அரசு சொல்லும் காரணம் முட்டாள்தனமானது மட்டுமல்ல, அயோக்கியத்தனமானதும்கூட.

"தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்; தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவை பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்; இந்தியாவின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள் செயல்படுகின்றனர்" என்கிறது உள்துறை அமைச்சகம்.

இதனால் யுஏபிஏ எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் 2024 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இலங்கையில்தான் தமிழீழம் அமைக்க முடியும்; அப்படி அமைத்தால் இந்திய அரசுக்கு என்னவாம்? இந்துத்துவவாதிகளுக்கும் என்னவாம்? இந்துத்துவவாதிகள் தான் இந்தியாவிலேயே சிறுபான்மையோர்; இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ அல்ல.

ஆனால் மிகத் தந்திரமாக இஸ்லாமியரையும் கிறிஸ்தவரையும் சிறுபான்மையர் என ஏமாளி வட இந்தியரை நம்பவைத்து அதிகாரம் செய்து வருகின்றனர்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இங்கிருந்த நாலாயிரத்துச் சொச்சம் இனக்குழுவினரையும் எப்படி வகைப்படுத்துவது என்று தலையில் அடித்துகொண்ட பிரிட்டிஷாருக்கு, திடீரெனத் தட்டிய பொறிதான் "இந்து" என்பது.

வேலை எளிதாக முடிய எல்லோருக்கும் "இந்து" என்றே நாமகரணம் சூட்டிவிட்டனர். அதை இந்துத்துவவாதிகள் பிடித்துக்கொண்டு, எல்லோரையும் தமக்குக் கீழ் என்று வைத்து அவமதித்து, வஞ்சித்து, சுரண்டி வருகின்றனர்.

இப்படி இந்துத்துவம் கைகொடுப்பதால்தான் அதனை விடாது பிடித்துக்கொண்டுள்ளனர். பள்ளியில் பாஸ் மார்க் என்பது 35 விழுக்காடு; ஆனால் 31 விழுக்காடு வாக்குதான் வாங்கியவர் மோடி.

உலக நாடுகளில் உள்ள தேர்தல் முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவர் அதிகாரத்தில் இருக்கவே தகுதியற்றவர். இங்குள்ள போலியான ஜனநாயக முறையே இவரை பதவியில் ஒட்டவைத்திருக்கக் காரணம்.

பிரதமராயிருக்கும் இவர், உலகமே ஏற்காத கேவலமான சனாதனத்தை இந்த அறிவியல்-தொழில்நுட்ப காலத்திலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் தூக்கிப்பிடிப்பதை என்னென்று சொல்ல?

தனது ரத்த பந்தம் ராஜபக்சே மூலம் ஈழத் தமிழர் 1.5 லட்சம் பேரை இனப்படுகொலை செய்த இந்துத்துவ சனாதனம்தான், விடுதலைப் புலிகள் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்திருக்கிறது!

தனது மோடி ஆட்சி முடிவுக்கு வந்தாலும் தவறாமல் இதைச் செய்ததன் மூலம் மானுட விடுதலைக்கு, ஏன் மானுடத்திற்கே எதிரான ஒரே கட்சி என்பதை பாசிச பாஜக நிலைநாட்டியிருக்கிறது!

பாஜகவின் இந்த அயோக்கியத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பகுத்தறிவுச் சுடரால் கருகிக்கொண்டிருக்கும் சனாதனத்தால் தமிழர் விடுதலையை, தமிழீழ விடுதலையை தடுத்துவிட முடியாது என எச்சரிக்கிறது" என, வேல்முருகன் தெரிவித்துள்ளார்

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்